கோலாலம்பூர்: மலேசியா மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடரில் இந்தியாவின் சிந்து, ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் சாதிக்க காத்திருக்கின்றனர்.
மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் மாஸ்டர்ஸ் சூப்பர் பாட்மின்டன் தொடர் இன்று துவங்குகிறது. இந்தியா சார்பில் சிந்து, பிரனாய், ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். சமீபத்திய அணிகளுக்கான சுதிர்மேன் கோப்பை தொடரில் இந்திய நட்சத்திரங்கள் ஏமாற்றினர். மூன்று லீக் போட்டியில் ஒன்றில் மட்டுமே வென்றது. ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கம் வென்ற சிந்து, ஒற்றையர் பிரிவில் இரண்டு போட்டியிலும் வீழ்ந்தார். இதே போல ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்ரீகாந்த் ஏமாற்றினார். இதில் செய்த தவறை மாற்றி வெற்றிப்பாதைக்கு திரும்ப வேண்டும்.
இன்றைய முதல் சுற்றில் சிந்து, டென்மார்க்கின் கிறிஸ்டோபர்சென் மோதவுள்ளனர். இவர் ஐரோப்பிய அரங்கில் மட்டுமே பல பதக்கம் வென்றுள்ளார். இது சிந்துவுக்கு சாதகமாக அமையலாம்.
சமாளிப்பாரா லக்சயா
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சவாலில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், ஜப்பானின் சுனேயமாவை சந்திக்கவுள்ளார். இதைப்போல முதல் சுற்றில் பிரனாய், சீன தைபேயின் டியான் சென் மோதவுள்ளனர்.
சுதிர்மேன் கோப்பையில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்காத லக்சயா சென் முதல் சுற்றில் முன்னாள் உலக சாம்பியனான லோ கியானை (சிங்கப்பூர்) எதிர் கொள்கிறார்.
ஆசிய சாம்பியன்ஷிப் ஆண்கள் இரட்டையரில் தங்கம் வென்ற சாத்விக்– சிராக் ஜோடியும் இன்று களம் காண்கிறது.
தகுதிப்போட்டியில் இந்தியாவின் மாளவிகா, மிதுன் மஞ்சுநாத் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.