ஆமதாபாத்: பெண்கள் கால்பந்து லீக் தொடரின் பைனலுக்கு கேரளா, கிக்ஸ்டார்ட் அணிகள் முன்னேறின.
இந்தியாவில் பெண்களுக்கான கால்பந்து லீக் தொடர், ஆமதாபாத்தில் நடக்கிறது. முதல் அரையிறுதியில் தமிழகத்தின் சேது மதுரை அணி, கர்நாடகாவின் கிக்ஸ்டார்ட் அணியை சந்தித்தது. கிக்ஸ்டார்ட் வீராங்கனைகள் கதுங்குவா (11வது), சாரா லிம்பு (45+4வது நிமிடம்) தலா ஒரு கோல் அடித்தனர். சேது அணி தரப்பில் யாரும் கோல் அடிக்கவில்லை. முடிவில் சேது அணி 0–2 என தோல்வியடைந்தது.
மற்றொரு அரையிறுதியில் நடப்பு சாம்பியன் கோகுலம் கேரளா அணி, ஈஸ்டர்ன் ஸ்போர்ட்டிங் அணியை 5–1 என்ற கோல் கணக்கில் சாய்த்து பைனலுக்குள் நுழைந்தது. கேரளா அணி சார்பில் இந்துமதி (31, 70வது), சபித்ரா (45+3, 90+5வது) தலா இரண்டு கோல் அடித்தனர். விவியன் (55வது) தன் பங்கிற்கு ஒரு கோல் அடித்தார்.