மாட்ரிட்: காயம் காரணமாக பிரெஞ்ச் ஓபன் டென்னிசில் இருந்து விலகினார். அடுத்த ஆண்டில் ஓய்வு பெற உள்ளார்.
ஸ்பெயின் டென்னிஸ் வீரர் நடால் 36. கிராண்ட்ஸ்லாம் அரங்கில், 2 ஆஸ்திரேலிய ஓபன், 14 பிரெஞ்ச் ஓபன், 2 விம்பிள்டன், 4 யு.எஸ்., ஓபன் என மொத்தம் 22 கோப்பை வென்றுள்ளார். இந்த ஆண்டு துவக்கத்தில் நடந்த ஆஸ்திரேலிய ஓபன் தொடர் 2வது சுற்றில் இவரது இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டது.
இதன் பின் மாஸ்டர்ஸ் தொடர், இந்தியன் வெல்ஸ், மயாமி உட்பட எவ்வித தொடரிலும் பங்கேற்கவில்லை. தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்காததால், உலகத் தரவரிசையில் 912 வாரத்துக்குப் பின் முதன் முறையாக ‘டாப்–10’ பட்டியலில் இருந்து தள்ளப்பட்டார். தற்போது 14வது இடத்தில் உள்ளார்.
மே 28ல் துவங்கும் பிரெஞ்ச் ஓபன் தொடரில் எப்படியும் பங்கேற்பார் என நம்பப்பட்டது. ஏனெனில் ‘களிமண்’ கள நாயகனான இவர், இத்தொடரில் மட்டும் 18 முறை களமிறங்கி, பைனலுக்கு முன்னேறிய 14 முறையும் கோப்பை கைப்பற்றினார். தற்போது இத்தொடரில் இருந்தும் விலகினார். தவிர அடுத்த ஆண்டு டென்னிஸ் அரங்கில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக தெரிவித்தார்.
இதுகுறித்து நடால் கூறியது:
கடந்த நான்கு மாதங்களாக என்னால் முடிந்தளவுக்கு மீண்டு வர போராடினேன். இது கடினமான காலமாக இருந்தது. ஆஸ்திரேலிய தொடரில் ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்டு வருவதற்கான வழியை கண்டறிய முடியவில்லை. பிரெஞ்ச் ஓபனில் விளையாட தயாராகவில்லை என்ற உண்மையை என்னால் உணர முடியவில்லை. இப்போட்டியில் பங்கேற்க முடியாத நிலையில் உள்ளேன்.
கொரோனா பெருந்தொற்றுக்குப் பின் தினமும் பயிற்சியில் ஈடுபட, தினசரி பணிகளைச் செய்யக் கூட எனது உடல் ஒத்துழைக்கவில்லை. அளவுக்கு அதிகமாக வலி காரணமாக, தினமும் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டன. இதில் இருந்து மீள, பயிற்சிகளை நிறுத்தினேன். மீண்டும் மைதானத்துக்கு எப்போது திரும்புவேன் எனத் தெரியவில்லை.
எப்போது ஓய்வு
நாளை என்ன நடக்கும் என யாருக்கும் தெரியாது. ஓய்வு குறித்து இப்போது உறுதியாக எதுவும் சொல்ல முடியாது. அடுத்த ஆண்டு அனைத்து தொடர்களிலும் பங்கேற்று ஒவ்வொன்றில் இருந்தும் விடை பெற முயற்சிப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.