புதுடில்லி: இந்தியா, பாகிஸ்தான்அணிகள் டெஸ்ட் தொடரில் மோத வாய்ப்பு இல்லை.
மும்பை பயங்கரவாத தாக்குதலுக்குப் பின் இந்தியா, பாகிஸ்தான் உறவு பாதிக்கப்பட்டது. இருப்பினும் 2012-–13ல் இந்தியா வந்த பாகிஸ்தான் அணி, ‘டி–20’, ஒருநாள் தொடரில் பங்கேற்றது. இதன்பின் இரு அணிகள் இடையே கிரிக்கெட் தொடர் நடக்கவில்லை. ஐ.சி.சி., தொடரில் மட்டும் மோதின.
இந்திய அணி 2008க்குப் பின் பாகிஸ்தான் சென்றது இல்லை. வரும் செப்டம்பர் மாதம் நடக்கவுள்ள ஆசிய கோப்பை தொடரை, பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு மாற்ற முயற்சிகள் நடக்கின்றன. இதனிடையே இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் டெஸ்ட் தொடர் பொதுவான இடத்தில் நடக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகின.
இதுகுறித்து பாகிஸ்தான்கிரிக்கெட் போர்டு சேர்மன் நஜாம் சேத்தி கூறுகையில், ‘‘இந்தியா, பாகிஸ்தான் மோதும் டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்ரிக்க நாடுகளில் நடத்தலாம் என நினைக்கிறேன். இதில் இங்கிலாந்து அல்லது ஆஸ்திரேலியா சிறந்த தேர்வாக இருக்கும். இரு அணிகள் மோதும் டெஸ்ட் போட்டியால் ஆஸ்திரேலிய மைதானங்கள் நிரம்பி வழிந்தால் நன்றாக இருக்கும்,’’ என்றார்.
பி.சி.சி.ஐ., மறுப்பு
நஜாம் சேத்தியின் கருத்துக்கு இந்திய கிரிக்கெட் போர்டு(பி.சி.சி.ஐ.,) மறுப்பு தெரிவித்தது. இதுகுறித்து வெளியான செய்தியில்,‘வரும் நாட்களிலும் அல்லது எதிர்காலத்திலும் இதுபோன்ற தொடர் நடக்க வாய்ப்பு இல்லை. இதற்கான திட்டமும் இல்லை. பாகிஸ்தானுக்கு எதிரான எவ்வித தொடரிலும் பங்கேற்க இந்தியா தயாராக இல்லை,’ என தெரிவித்துள்ளது.