சியால்ஹெட்: அயர்லாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் சாகிப், தவ்ஹித் அரை சதம் விளாச வங்கதேச அணி 183 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வங்கதேசம் சென்றுள்ள அயர்லாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி சியால்ஹெட்டில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற அயர்லாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது.
வங்கதேச அணிக்கு கேப்டன் தமிம் இக்பால் (3) ஏமாற்றினார். லிட்டன் (26), நஜ்மல் (25) விரைவில் திரும்பினர். அனுபவ வீரர் சாகிப், 22 வயது அறிமுக வீரர் தவ்ஹித் ஜொலித்தனர். இருவரும் அரை சதம் கடந்தனர். சாகிப் 93, தவ்ஹித் 92 ரன்களில் அவுட்டாகினர். கிரகாம் ஹியும் ‘வேகத்தில்’ முஷ்பிகுர் (44) சிக்கினார். வங்கதேச அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 338 ரன்கள் எடுத்தது.
எபாதத் அசத்தல்
அயர்லாந்து அணிக்கு ஸ்டீபன் (34), பால் ஸ்டிரிலிங் (22) சொதப்பினர். டஸ்கின் பந்துவீச்சில் கேப்டன் பால்பிரின் (5), லார்கன் (6) ஒற்றை இலக்கில் வெளிறேினர். எபாதத் ‘வேகத்தில்’ ஹாரி (3), மார்க் (13) அவுட்டாகினர். ஜார்ஜ் மட்டும் 45 ரன்கள் விளாசி ஆறுதல் தந்தார். அயர்லாந்து அணி 30.5 ஓவரில் 155 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி வீழ்ந்தது.
338
ஒரு நாள் அரங்கில் வங்கதேச அணி தனது அதிகபட்ச ‘ஸ்கோரை’ (338/8) பதிவு செய்தது. இதற்கு முன், தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக (ஓவல், 2019) 330/6 ரன்கள் எடுத்ததே அதிகம்.
92
அறிமுக ஒரு நாள் போட்டியில், அதிக ரன் (92) எடுத்த முதல் வங்கதேச வீரரானார் தவ்ஹித். இதற்கு முன், 2011ல் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஹராரே போட்டியில் நாசிர் ஹொசைன் 63 ரன் எடுத்ததே அதிகமாக இருந்தது.
3
வங்கதேச வீரர் சாகிப் 24 ரன் எடுத்தபோது, 7 ஆயிரம் ரன்களை எட்டினார். ஒரு நாள் அரங்கில் 7 ஆயிரம் ரன், 300 விக்கெட் கைப்பற்றிய 3வது வீரரானார். இதற்கு முன், இலங்கையின் ஜெயசூர்யா, பாகிஸ்தானின் அப்ரிதி இந்த பெருமையை பெற்றிருந்தனர்.