புதுடில்லி: ‘‘உலக டெஸ்ட் பைனலுக்கான இந்திய அணியில் லோகேஷ் ராகுலுக்கு வாய்ப்பு அளிக்கலாம்,’’ என ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
இந்திய அணி விக்கெட் கீப்பர் லோகேஷ் ராகுல், 30. டெஸ்டில் தொடர்ந்து ஏமாற்றியதால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி இரண்டு போட்டியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இவருக்குப்பதில் களமிறங்கிய விக்கெட்கீப்பர் பரத் (20, 44) ஜொலிக்கவில்லை.
இதற்கிடையே, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மும்பையில் நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் ராகுல் அசத்தினார். இக்கட்டான நிலையில் 75 ரன் விளாசி வெற்றிக்கு கைகொடுத்தார். இவருக்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் (ஜூன் 7–11, ஓவல்) வாய்ப்பு தரப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறுகையில்,‘‘ ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் லோகேஷ் ராகுல் சிறப்பாக விளையாடினார். கீப்பிங்கிலும் தொடர்ந்து நம்பிக்கை அளிக்க வேண்டும். இப்படி செயல்பட்டால் உலக டெஸ்ட் பைனலுக்கான இந்திய அணியில் கீப்பர் பேட்ஸ்மேனாக இடம்பெறலாம். மிடில் ஆர்டரில் 5 அல்லது 6வது வீரராக களமிறங்க வேண்டும். இத்தொடரில் இன்னும் இரண்டு போட்டி மீதமுள்ள நிலையில், தேர்வுக்குழுவின் கவனத்தை தன் பக்கம் திருப்பி உள்ளார். இங்கிலாந்து மண்ணில் 9 டெஸ்டில் இரண்டு சதம், ஒரு அரை சதம் அடித்துள்ளார். இதுவும் உலக டெஸ்ட் பைனலில் இவருக்கு வாய்ப்பு கிடைக்க உதவும்,’’ என்றார்.