வெலிங்டன்: இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்டில் நியூசிலாந்தின் கான்வே அரைசதம் கடந்தார்.
நியூசிலாந்து சென்றுள்ள இலங்கை அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் நியூசிலாந்து வென்றது. நேற்று, இரண்டாவது டெஸ்ட் வெலிங்டனில் துவங்கியது. மழையால் போட்டி தாமதமானது. ‘டாஸ்’ வென்ற இலங்கை அணி ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.
நியூசிலாந்து அணிக்கு டாம் லதாம், கான்வே ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 78 ரன் சேர்த்த போது ரஜிதா பந்தில் லதாம் (21) அவுட்டானார். பொறுப்பாக ஆடிய கான்வே அரைசதம் கடந்தார். இவர், 78 ரன்னில் தனஞ்செயா டி சில்வா ‘சுழலில்’ சிக்கினார். பின் இணைந்த கேன் வில்லியம்சன், ஹென்றி நிக்கோல்ஸ் ஜோடி நிதானமாக விளையாடியது.
நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 155 ரன் எடுத்திருந்த போது மோசமான வானிலை, போதிய வெளிச்சமின்மை காரணமாக முதல் நாள் ஆட்டம் முன்னதாகவே முடிவுக்கு வந்தது. வில்லியம்சன் (26), நிக்கோல்ஸ் (18) அவுட்டாகாமல் இருந்தனர். இலங்கை சார்பில் ரஜிதா, தனஞ்செயா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.