மார்கோ: ஐ.எஸ்.எல்., கால்பந்து பைனலில் பெங்களூரு, மோகன் பகான் அணிகள் மோதவுள்ளன. இதில் செத்ரியின் பெங்களூரு அணி கோப்பை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் நடக்கும் ஐ.எஸ்.எல்., 9வது ‘சீசன்’ இறுதிகட்டத்தை எட்டி உள்ளது. இன்று கோவாவின் மார்கோவில் நடக்கும் பைனலில் பெங்களூரு, மோகன் பகான் அணிகள் மோதுகின்றன.
இத்தொடரில் மூன்று முறை கோப்பை வென்ற அணி கோல்கட்டா. கடந்த 2020 முதல் மோகன் பகான் அணியாக மாறியது. இந்த மாற்றத்திற்குப்பின், சாம்பியன் பட்டம் வெல்ல போராடுகிறது. இம்முறை தொடர்ந்து 3 வெற்றி, 2 போட்டியை ‘டிரா’ செய்து அசத்துகிறது. இதுவரை மொத்தமே எதிரணிக்கு 17 கோல்தான் விட்டுத்தந்துள்ளது. பிரிதம், பிரன்டன் உள்ளிட்ட தற்காப்பு வீரர்கள் அரணாக திகழ்கின்றனர். டிமிட்ரி (10 கோல்), ஹியுகோ (5) கைகொடுத்தால் முதல் கோப்பையை முத்தமிடலாம்.
பெங்களூரு அணி கடந்த 2019ல் கோப்பை கைப்பற்றியது. சுனில் செத்ரி அணியின் பலமாக உள்ளார்.
இதுவரை 4 கோல் அடித்துள்ள இவர், ஆட்டத்தின் போக்கை மாற்றிக்கூடியவர். 38 வயதிலும் ‘மின்னல்’ வேகத்தில் கோல் அடிப்பார். இவருக்கு சிவசக்தி நாராயணன் (6 கோல்) ராய் கிருஷ்ணா (5) உள்ளிட்டோரின் பங்களிப்பு அவசியம்.
இரு அணிகள் இதுவரை 6 போட்டியில் மோதி உள்ளன. இதில் மோகன் பகான் 4, பெங்களூரு ஒரு வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி ‘டிரா’ ஆனது. இதனால் இன்று பெங்களூரு சுதாரிப்புடன் விளையாடினால் நல்லது.