புதுடில்லி: டில்லி அணியின் புதிய கேப்டனாக வார்னர் நியமிக்கப்பட்டார்.
ஐ.பி.எல்., தொடரின் 16வது சீசன், மார்ச் 31ல் துவங்குகிறது. இதில் இடம் பெற்றுள்ள டில்லி அணிக்கு இந்தியாவின் ரிஷாப் பன்ட் கேப்டனாக இருந்தார். கடந்த ஆண்டு இறுதியில் கார் விபத்தில் சிக்கிய இவர், இத்தொடரில் இருந்து விலகினார். இவருக்கு பதிலாக புதிய கேப்டனாக ஆஸ்திரேலிய துவக்க வீரர் வார்னர் நியமிக்கப்பட்டுள்ளார். ஐ.பி.எல்., அரங்கில் 2009ல் அறிமுகமான வார்னர், 2013 வரை டில்லி அணிக்காக விளையாடினார். பின் 2014ல் ஐதராபாத் அணியில் இணைந்தார். கடந்த சீசனில் மீண்டும் டில்லி அணியில் இணைந்தார். ஐ.பி.எல்., அரங்கில் இதுவரை 162 போட்டியில், 4 சதம், 55 அரைசதம் உட்பட 5881 ரன் (சராசரி 42.01, ‘ஸ்டிரைக் ரேட்’ 140.69) குவித்துள்ளார். டில்லி அணிக்கு துணைக் கேப்டனாக இந்திய ‘ஆல்–ரவுண்டர்’ அக்சர் படேல் அறிவிக்கப்பட்டுள்ளார். டில்லி அணியின் கிரிக்கெட் இயக்குனராக கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார்.