கோல்கட்டா: ‘‘இந்திய வீரர் செத்ரி தனது கால்பந்து வாழ்க்கையில் கடைசி ‘சீசனில்’ விளையாடி வருகிறார். அடுத்த ஆண்டு நடக்கவுள்ள ஆசிய கோப்பை தொடருடன் இவர் விடைபெறலாம்,’’ என, இந்திய அணி பயிற்சியாளர் ஸ்டிமேக் தெரிவித்தார்.
இந்திய கால்பந்து அணி கேப்டன் சுனில் செத்ரி, 38. முன்கள வீரரான இவர், இந்திய அணிக்காக அதிக கோல் (131 போட்டி, 84 கோல்) அடித்த வீரர்களில் முதலிடத்தில் உள்ளார். சர்வதேச அரங்கில் தற்போது விளையாடி வரும் வீரர்களில் அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளார்.
ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடரில் பெங்களூரு அணி கேப்டனாக அசத்தி வரும் இவர், அணியை பைனலுக்கு கொண்டு சென்றுள்ளார்.
இவர் குறித்து இந்திய கால்பந்து அணி பயிற்சியாளர் இகோர் ஸ்டிமேக் கூறியது:
இந்திய வீரர் செத்ரி தனது கடைசி கட்ட ‘சீசனில்’ விளையாடி வருகிறார். அடுத்த ஆண்டு நடக்கவுள்ள ஆசிய கோப்பை தொடர், இவரது கடைசி தொடராக இருக்கலாம். பயிற்சியில் ஈடுபடுவது, உடல் எடையை குறைப்பது உள்ளிட்ட பல விஷயங்கள் இந்த வயதில் செத்ரிக்கு சவாலாக உள்ளன. இவற்றை சமாளித்து இந்தியா, கிளப் அணிக்கு தேவைப்படும் போது சிறப்பான பங்களிப்பை தருகிறார். வியக்கத்தக்க கோல் அடிக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.