இந்தியன் வெல்ஸ்: ஏ.டி.பி., டென்னிஸ் தொடர் ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதிக்கு இந்தியாவின் போபண்ணா ஜோடி முன்னேறியது.
அமெரிக்காவில் ஆண்களுக்கான ஏ.டி.பி., டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மாத்யூ எப்டென் ஜோடி, ஸ்பெயினின் டேவிட், பிரேசிலின் ரபேல் மடோஸ் ஜோடியை சந்தித்தது.
முதல் செட்டை போபண்ணா ஜோடி 7–5 என கைப்பற்றியது. அடுத்த செட்டை 3–6 என கோட்டை விட்டது. வெற்றியாளரை முடிவு செய்ய போட்டி சூப்பர் ‘டை பிரேக்கருக்கு’ சென்றது. இதில் அசத்திய போபண்ணா ஜோடி 10–6 என வென்றது. ஒரு மணி நேரம் 41 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் போபண்ணா ஜோடி 7–5, 3–6, 10–6 என வென்றது.
இரண்டாவது சுற்றில் போலந்தின் ஹியுபெர்ட், பல்கேரியாவின் டிமிட்ரோவ் ஜோடியை சந்திக்க இருந்தது. கடைசியில் காயம் காரணமாக டிமிட்ரோவ் ஜோடி விலகிக் கொள்ள, போபண்ணா ஜோடி காலிறுதிக்குள் நுழைந்தது.