கோல்கட்டா: ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடரின் பைனலுக்கு மோகன் பகான் அணி முன்னேறியது. அரையிறுதியில் 4–3 என ‘பெனால்டி ஷூட் அவுட்’ முறையில் ஐதராபாத் அணியை வீழ்த்தியது.
இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து 9வது சீசன் நடக்கிறது. இதன் பைனலுக்கு பெங்களூரு அணி முன்னேறியது. இரண்டாவது அரையிறுதியில் கோல்கட்டா மோகன் பகான், ‘நடப்பு சாம்பியன்’ ஐதராபாத் அணிகள் மோதின. இதன் முதல் சுற்று கோல் எதுவுமின்றி ‘டிரா’ ஆனது.
கோல்கட்டாவில் இரண்டாவது சுற்று நடந்தது. போட்டியின் கடைசி நிமிடம் வரை போராடிய இரு அணியினரால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இரண்டு சுற்றின் முடிவில் போட்டி 0–0 என சமநிலையில் இருந்ததால், இரு அணிகளுக்கும் தலா 15 நிமிடம் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. ஆனால், ஒரு கோல் கூட அடிக்கப்படவில்லை.
இதனையடுத்து போட்டியின் முடிவு ‘பெனால்டி ஷூட் அவுட்’ முறைக்கு சென்றது. இரு அணிகளுக்கும் தலா 5 வாய்ப்புகள் வழங்கப்பட்டன. இதில் அபாரமாக ஆடிய மோகன் பகான் அணி 4–3 என்ற கணக்கில் வெற்றி பெற்று 2வது முறையாக (2020–21, 2022–23) பைனலுக்கு முன்னேறியது.
மார்ச் 18ல் கோவாவில் நடக்கவுள்ள பைனலில் மோகன் பகான், பெங்களூரு அணிகள் மோதுகின்றன.