பெங்களூரு: ஐ.எஸ்.எல்., கால்பந்து பைனலுக்கு பெங்களூரு அணி முன்னேறியது. பரபரப்பான அரையிறுதியில் ‘சடன்டெத்’ முறையில் 9–8 என மும்பை அணியை வீழ்த்தியது.
இந்தியாவில், இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து 9வது சீசன் நடக்கிறது. பெங்களூருவில் நடந்த முதல் அரையிறுதிக்கான இரண்டாவது சுற்றுப் போட்டியில் பெங்களூரு, மும்பை அணிகள் மோதின. சமீபத்தில் மும்பையில் நடந்த முதல் சுற்றில் பெங்களூரு அணி 1–0 என வெற்றி பெற்றிருந்தது.
ஆட்டத்தின் 22வது நிமிடத்தில் பெங்களூருவின் ஜேவியர் ஹெர்னாண்டஸ் முதல் கோல் அடித்தார். இதற்கு, 30வது நிமிடத்தில் மும்பையின் பிபின் சிங் ஒரு கோல் அடித்து பதிலடி கொடுத்தார். முதல் பாதி முடிவு 1–1 என சமநிலையில் இருந்தது. இரண்டாவது பாதியின் 66வது நிமிடத்தில் மும்பை வீரர் மெஹ்தாப் சிங் ஒரு கோல் அடித்தார். இதற்கு பெங்களூரு வீரர்களால் பதிலடி கொடுக்க முடியவில்லை.
ஆட்டநேர முடிவில் மும்பை அணி 2–1 என வெற்றி பெற்றது. இரண்டு சுற்றுகளின் முடிவில் போட்டி 2–2 (1–0, 1–2) என சமநிலையில் இருந்தது. பின் இரு அணிகளுக்கும் தலா 15 நிமிடம் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. இதன் முடிவில் மீண்டும் 2–2 என சமநிலை வகிக்க, போட்டி ‘பெனால்டி ஷூட் அவுட்’ முறைக்கு சென்றது. இதில் இரு அணிகளுக்கும் தலா 5 வாய்ப்புகள் வழங்கப்பட்டன. இரு அணிகளும் தலா 5 கோல் அடிக்க, போட்டி ‘சடன் டெத்’ முறைக்கு சென்றது. இதில் பெங்களூரு அணி 9–8 என்ற கணக்கில் வெற்றி பெற்று 3வது முறையாக (2017–18, 2018–19, 2022–23) பைனலுக்குள் நுழைந்தது.