ஆமதாபாத்: ஆமதாபாத் டெஸ்டில் அசத்திய கோஹ்லி சதம் கடந்தார். இவரது அபார ஆட்டம் கைகொடுக்க இந்தியா முன்னிலை பெற்றது.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. மூன்று போட்டிகள் முடிவில், இந்தியா 2–1 என தொடரில் முன்னிலையில் உள்ளது. நான்காவது டெஸ்ட் குஜராத்தின் ஆமதாபாத்தில் உள்ள மோடி மைதானத்தில் நடக்கிறது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 480 ரன்கள் எடுத்தது. மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 289 ரன்கள் எடுத்திருந்தது.
பரத் விளாசல்: நான்காம் நாள் ஆட்டத்தில் மர்பி ‘சுழலில்’ ஜடேஜா (28) ஆட்டமிழந்தார். ஸ்ரேயாஸ் முதுகு வலியால் அவதிப்பட்டதால், விக்கெட்கீப்பர் ஸ்ரீகர் பரத் முன்னதாக வந்தார். கோஹ்லி, பரத் ஜோடி பொறுப்புடன் விளையாடியது. பரத் அதிரடியாக ஆடினார். கிரீன் பந்துவீச்சில் இரண்டு சிக்சர் விளாசினார். லியான் ‘சுழலில்’ பரத் (44) அவுட்டானார். கோஹ்லி, டெஸ்ட் அரங்கில் 28வது சதம் அடித்தார். இம்மகிழ்ச்சியில், கழுத்து செயினில் அணிந்திருந்த திருமண நிச்சயதார்த்த மோதிரத்தை முத்தமிட்டார். ‘கேலரியில்’ இருந்த இந்திய ரசிகர்கள் கோஹ்லி... கோஹ்லி என ஆர்ப்பரித்தனர். பின், கோஹ்லியுடன் அக்சர் இணைந்தார்.
அஷ்வின் ஏமாற்றம்: கோஹ்லி 150 ரன்களை எட்ட, இந்தியாவின் ‘ஸ்கோரும்’ 500 ஐ கடந்தது. அரை சதம் அடித்த அக்சர் 79 ரன்னில் ஆட்டமிழந்தார். லியான் பந்துவீச்சில் அஷ்வின் (7) சிக்கினார். மர்பியின் ‘சுழலில்’ கோஹ்லி (186 ரன், 364 பந்து, 15 பவுண்டரி) அவுட்டானார். இந்திய அணி முதல் இன்னிங்சில் 571 ரன்கள் எடுத்தது. 91 ரன்கள் முன்னிலை பெற்றது.
ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக லியான், மர்பி தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
பின் ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்சை துவக்கியது. ஹெட் ‘நைட் வாட்ச்மேன்’ குனேமானுடன் களமிறங்கினார். ஆட்ட நேர முடிவில், ஆஸ்திரேலியா 2வது இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 3 ரன்கள் எடுத்து, 88 ரன்கள் பின்தங்கி இருந்தது. குனேமான் (0), ஹெட் (3) அவுட்டாகாமல் இருந்தனர்.
இன்று போட்டி, ‘டிரா’ ஆக அதிக வாய்ப்பு உண்டு. ஒருவேளை இந்திய பவுலர்கள் எழுச்சி பெற்றால், அதிசய வெற்றி பெறலாம்.
75வது சதம்
மூன்றுவித கிரிக்கெட்டிலும் அதிக (75) சதம் அடித்தவர்கள் பட்டியலில் கோஹ்லி 2வது இடத்தில் நீடிக்கிறார். இவர் டெஸ்டில் 28, ஒரு நாள் போட்டியில் 46, ‘டி–20’யில் ஒரு சதம் விளாசி உள்ளார். ஜாம்பவான் சச்சின் 100 சதத்துடன் (டெஸ்ட் –51 சதம், ஒரு நாள்–49) முதலிடம் வகிக்கிறார்.
* சர்வதேச அரங்கில், குறைந்த இன்னிங்சில் 75 சதம் அடித்தவர்கள் பட்டியலில் ஜாம்பவான் சச்சினை முந்தினார் கோஹ்லி. இவர் 552 இன்னிங்சில் இந்த இலக்கை எட்டி உள்ளார். சச்சினுக்கு 566 இன்னிங்ஸ் தேவைப்பட்டது.
1205 நாட்களுக்கு பின்
டெஸ்ட் அரங்கில் கோஹ்லி 1205 நாட்களுக்குப்பின் சதம்(சுமார் 40 மாதம்) அடித்துள்ளார். கடைசியாக, 2019 நவம்பரில் வங்கதேச அணிக்கு எதிரான கோல்கட்டா டெஸ்டில் சதம் எட்டி இருந்தார்.
41 இன்னிங்ஸ்
இந்தியாவின் கோஹ்லி 27வது சதம் அடித்து, 41 இன்னிங்ஸ் கடந்து 28வது சதம் கடந்தார். இரண்டு சதம் அடிப்பதற்கு இடையே அதிக இன்னிங்சை கோஹ்லி எடுத்தது இதுவே முதல் முறை.
லாரா சாதனை முறியடிப்பு
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மூன்றுவித கிரிக்கெட்டையும் சேர்த்து, அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில், வெஸ்ட் இண்டீசின் லாராவை (4714 ரன், 82 போட்டி) முந்தி கோஹ்லி 2வது இடம் பிடித்தார். கோஹ்லி 89 போட்டியில் 4856 ரன் விளாசி உள்ளார். இதுவரை 43 ஒரு நாள் போட்டியில் 2083 ரன், 22 ‘டி–20’யில் 794 ரன், 24 டெஸ்டில் 1979 ரன் குவித்துள்ளார். முதலிடத்தில் ஜாம்பவான் சச்சின் (6707 ரன், 110 போட்டி) உள்ளார்.
28 சதம்
அதிக டெஸ்ட் சதம் (28) அடித்தவர்கள் பட்டியலில் 12வது இடத்திலிருந்து முன்னேறிய கோஹ்லி, 11வது இடத்தை தென் ஆப்ரிக்காவின் ஆம்லா, ஆஸ்திரேலியாவின் கிளார்க் உடன் பகிர்ந்து கொண்டார்.
* தற்போது விளையாடும் வீரர்கள் பட்டியலில், ஆஸ்திரேலியாவின் ஸ்மித் (30), இங்கிலாந்தின் ரூட் (29) முதலிரண்டு இடங்களில் உள்ளனர். கோஹ்லி 3வது இடம் வகிக்கிறார்.
முதல்வன்
தற்போது விளையாடும் வீரர்களில், சர்வதேச அளவில் அதிக (75) சதம் அடித்தவர்கள் பட்டியலில் கோஹ்லி முதலிடத்தில் நீடிக்கிறார். இரண்டாவது இடத்தில் இங்கிலாந்தின் ஜோ ரூட், ஆஸ்திரேலியாவின் வார்னர் தலா 45 சதத்துடன் உள்ளனர். இந்தியாவின் ரோகித் (43) மூன்றாவது இடம் வகிக்கிறார்.
அதிக பந்து
டெஸ்ட் அரங்கில், இந்தியாவின் கோஹ்லி சதம் அடிக்க அதிக பந்துகளை (241) எடுத்துக்கொண்ட போட்டிகளில் வரிசையில் இது 2வது இடம் பிடித்தது. முதலிடத்தில் 2012ல் நடந்த நாக்பூர் டெஸ்ட் (289 பந்து, எதிர்– இங்கிலாந்து) உள்ளது.
கோபம்
ஆட்டத்தின் 108வது ஓவரின் 5வது பந்தை மர்பி வீசினார். பந்தை அருகிலேயே தட்டிவிட்ட கோஹ்லி, ரன் எடுக்க ஓடினார். மறுமுனையில் இருந்து ஓடிவந்த பரத், பாதியில் திரும்பி விட்டார். கோஹ்லி மீண்டும் பதட்டமாக திரும்பினார். இதனால், பரத்தை பார்த்து கோபத்துடன் முறைத்தார்.
கவாஜா காயம்
மர்பி வீசிய 148வது ஓவரின் முதல் பந்தை, அக்சர் சிக்சருக்கு பறக்கவிட்டார். இதை எல்லையில் இருந்து பறந்து தடுக்க முயன்ற கவாஜா கீழே விழுந்தார். இவரது இடது முழங்கால் விளம்பர பலகை மீது மோதியதால் காயத்தால் களத்திலிருந்து வெளியேறினார்.
கோஹ்லிக்கு உடல்நலக்குறைவா
கோஹ்லியின் மனைவியும், ‘பாலிவுட்’ நடிகையுமான அனுஷ்கா சர்மா வெளியிட்ட செய்தியில்,‘ உடல்நலக்குறைவுடன் விளையாடி உள்ளீர்கள். எனக்கு எப்போதும் ஊக்கம் தருகிறீர்கள்,’ என, தெரிவித்துள்ளார். இதனால், கோஹ்லி உடல்நிலை சரியில்லாத நிலையில் விளையாடி இருக்கலாம்.
சச்சின் வழியில்...
நேற்று சச்சினை போல பொறுப்பாக விளையாடினார் கோஹ்லி. கடந்த 2004ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சிட்னி டெஸ்டில், ஜாம்பவான் சச்சின் அசத்தினார். 436 பந்துகளை சந்தித்த இவர் 241 ரன் விளாசினார். இதனால், இந்தியா முதல் இன்னிங்சில் 705/7 (‘டிக்ளேர்’) ரன் குவித்தது. இப்போட்டி ‘டிரா’ ஆனது. இதே போல, ஆமதாபாத் டெஸ்டில் கோஹ்லி துாணாக நின்று விளையாடி 186 ரன் அடித்து, இந்திய அணி முன்னிலை பெற உதவினார். இந்த இரண்டு போட்டிகளையும் ஒப்பிட்டு ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர்.