புதுடில்லி: சர்வதேச டென்னிஸ் அரங்கில் இருந்து சமீபத்தில் ஓய்வு பெற்றார் இந்திய வீராங்கனை சானியா மிர்சா. இவருக்கு பாராட்டு தெரிவித்து பிரதமர் மோடி எழுதிய கடிதத்தில்,‘சானியா மிர்சா... நீங்கள் தொழில்ரிதீயிலான போட்டிகளில் பங்கேற்க மாட்டீர்கள் என்பதை டென்னிஸ் ரசிகர்கள் புரிந்து கொள்வது கடினமாக இருக்கும். ஆறு வயதில் இருந்து கடுமையாக போராடி, உலகத் தரம் வாய்ந்த வீராங்கனையாக உருவெடுத்தீர்கள். உங்களது வாழ்க்கை பயணம் வியக்கத்தக்கது. இந்தியாவுக்காக பதக்கம் வென்றது தான் பெரிய கவுரவம் என தெரிவித்து இருந்தீர்கள்.
உண்மையில் நீங்கள் தான் இந்தியாவின் பெருமை, நீங்கள் பெற்ற வெற்றிகள், ஒவ்வொரு இந்தியரின் இதயங்களை மகிழ்ச்சியால் நிரப்பியுள்ளது. இந்தியாவில் அதிகமான பெண்கள் டென்னிசை தேர்வு செய்ததற்கு நீங்கள் செய்த சாதனைகள் முக்கிய காரணம். உங்களது எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துகள்,’என தெரிவித்திருந்தார்.
பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த சானியா கூறுகையில், ‘‘உங்களது ஊக்கம் அளிக்கும் வார்த்தைகளுக்கு நன்றி. இந்தியாவுக்கு பெருமை அளிக்கும் வகையில் தொடர்ந்து செயல்படுவேன்,’’ என்றார்.