மும்பை: பிரிமியர் லீக் போட்டியில் டில்லி அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பேட்டிங்கில் அசத்திய ஷபாலி 28 பந்தில் 76 ரன் விளாசினார்.
இந்தியாவில் பெண்களுக்கான பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் முதல் சீசன் தற்போது நடக்கிறது. நவி மும்பையில் நடந்த லீக் போட்டியில் குஜராத், டில்லி அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற குஜராத் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
மரிஜான்னே அபாரம்
குஜராத் அணிக்கு துவக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. மரிஜான்னே பந்துகளில் மேக்னா (0), லாரா (1), வெளியேறினர். தொடர்ந்து மிரட்டிய இவர், ஆஷ்லே கார்டுனரை (0) போல்டாக்கினார். ஷிகா வீசிய அடுத்த ஓவரில் ஹேமலதா (5) வெளியேறினார். மறுபடியும் வந்த மரிஜான்னே, ஹர்லீன் (20), சுஷ்மாவை (2) அவுட்டாக்கினார். ஜார்ஜியா (22), தனுஜா (13) நீடிக்கவில்லை. குஜராத் அணி 20 ஓவரில் 105/9 ரன் மட்டும் எடுத்தது. கார்த் (32), மான்சி (5) அவுட்டாகாமல் இருந்தனர். மரிஜான்னே 5 விக்கெட் சாய்த்தார்.
ஷபாலி விளாசல்
எளிய இலக்கைத் துரத்திய டில்லி அணிக்கு கேப்டன் மெக் லானிங், ஷபாலி ஜோடி மிரட்டல் துவக்கம் கொடுத்தது. மின்னல் வேகத்தில் ரன் சேர்த்த ஷபாலி, 19 வது பந்தில் அரைசதம் எட்டினார். தனுஜா ஓவரில் 2 சிக்சர், மான்சி ஓவரில் 2 பவுண்டரி, 1 சிக்சர் அடித்த ஷபாலி, வெற்றியை உறுதி செய்தார்.
டில்லி அணி 7.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 107 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ஷபாலி (76 ரன், 28 பந்து), மெக் லானிங் (21) அவுட்டாகாமல் இருந்தனர்.