வியட்நாம்: ஆசிய கோப்பை கால்பந்து தகுதிச்சுற்றில் இருந்து வெளியேறியது இந்தியா. நேற்று நடந்த கடைசி போட்டியில் வியட்நாமுடன் 1–1 என இந்தியா ‘டிரா’ செய்தது.
ஆசிய கோப்பை கால்பந்து (20 வயது) தொடர் உஸ்பெகிஸ்தானில் 2024, மார்ச் 3–16ல் நடக்கவுள்ளது. இதற்கான முதல் கட்ட தகுதிச்சுற்று தற்போது நடக்கிறது. மொத்தம் 31 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பெறும் அணி, இரண்டாவது கட்ட தகுதிச்சுற்றுக்கு முன்னேறும்.
‘எப்’ பிரிவில் இடம் பெற்ற இந்திய அணி முதல் இரு போட்டியில் சிங்கப்பூர் (7–0), இந்தோனேஷியாவை (6–0) வென்றது. நேற்று தனது மூன்றாவது, கடைசி போட்டியில் வியட்நாமை சந்தித்தது. போட்டியின் 12வது நிமிடத்தில் இந்தியாவின் பாபினா தேவி ஒரு கோல் அடித்தார்.
முதல் பாதியின் ‘ஸ்டாப்பேஜ்’ நேரத்தில் (45+2வது) வியட்நாமின் ஹாட் லான் ஒரு கோல் அடித்தார். முடிவில் போட்டி 1–1 என ‘டிரா’ ஆனது. இப்பிரிவில் இந்தியா, வியட்நாம் அணிகள் தலா 3 போட்டியில் 2 வெற்றி, 1 ‘டிரா’ செய்து தலா 7 புள்ளி பெற்றன. இருப்பினும் கோல் அடிப்படையில் வியட்நாம் (15 கோல்) அணி, இந்தியாவை (14) முந்தி முதலிடம் பிடித்து, அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. இந்திய அணி தொடரில் இருந்து வெளியேறியது.