ஆமதாபாத்: ஆமதாபாத் டெஸ்டில் இளம் வீரர் சுப்மன் கில் அசத்தல் சதம் விளாச, இந்திய அணி சரியான பதிலடி கொடுத்தது.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. மூன்று போட்டிகள் முடிவில், இந்தியா 2–1 என தொடரில் முன்னிலையில் உள்ளது. நான்காவது டெஸ்ட் குஜராத்தின் ஆமதாபாத்தில் உள்ள மோடி மைதானத்தில் நடக்கிறது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 480 ரன்கள் எடுத்தது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில், இந்தியா முதல் இன்னிங்சில் 36/0 ரன்கள் எடுத்திருந்தது.
சுப்மன் நம்பிக்கை: மூன்றாவது நாள் ஆட்டத்தில் குனேமான் ‘சுழலில்’ ரோகித் (35) ஆட்டமிழந்தார். சுப்மன், புஜாரா ஜோடி நம்பிக்கை அளித்தது. அருமையாக ஆடிய சுப்மன், இந்திய ரசிகர்களுக்கு உற்சாகம் அளித்தார். மர்பி வீசிய 62வது ஓவரின் இரண்டாவது பந்தை பவுண்டரிக்கு அனுப்பி சதம் எட்டினார். இது, இந்திய மண்ணில் இவர் அடித்த முதல் டெஸ்ட் சதம். 2வது விக்கெட்டுக்கு 113 ரன் சேர்த்த நிலையில், மர்பி ஓவரின் கடைசி பந்தில் புஜாரா (42) ஆட்டமிழந்தார். இதற்கு, ‘ரிவியூ’ கேட்டும் பலன் இல்லை.
கோஹ்லி அசத்தல்: இதன்பின் இளம் சுப்மனும், அனுபவ வீரரான கோஹ்லியும் கைகோர்த்தனர். லியான் பந்தை சுப்மன் பவுண்டரிக்கு விரட்டினார். ஸ்டார்க் பந்துவீச்சில் கோஹ்லி இரண்டு பவுண்டரி அடித்தார். லியான் ‘சுழலில்’ சுப்மன், 128 ரன்களுக்கு (235 பந்து, 12 பவுண்டரி, ஒரு சிக்சர்) அவுட்டானார். நீண்ட நாட்களுக்குப்பின், ஜோராக விளையாடிய கோஹ்லி, டெஸ்டில் 29வது அரை சதம் கடந்தார். குனேமான் பந்தை ஜடேஜா சிக்சருக்கு பறக்கவிட்டார். ஆட்ட நேர முடிவில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 289 ரன்கள் எடுத்து, 191 ரன்கள் பின்தங்கி இருந்தது. கோஹ்லி (59), ஜடேஜா (16) அவுட்டாகாமல் இருந்தனர். ஆஸ்திரேலியா சார்பில் லியான், குனேமான், மர்பி தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
இன்று இந்திய பேட்டர்கள் பொறுப்பாக ஆடினால், வலுவான முன்னிலை பெற்று ஆஸ்திரேலியாவுக்கு நெருக்கடி தரலாம்.
2000 ரன்
ஆமதாபாத் டெஸ்டில் ஜொலித்த, புஜாரா ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2 ஆயிரம் ரன்களை கடந்த 4வது இந்திய வீரரானார். இதுவரை 24 போட்டியில் 2033 ரன் எடுத்துள்ளார். ஏற்கனவே, ஜாம்பவான் சச்சின் (3630 ரன்), லட்சுமண் (2434), டிராவிட் (2143) இந்த இலக்கை எட்டி உள்ளனர்.
3வது இடம்
டெஸ்ட் அரங்கில், அதிக சிக்சர் விளாசிய இந்திய வீரர்கள் பட்டியலில் ஜாம்பவான் சச்சின் உடன் ரோகித் 3வது இடத்தை பகிர்ந்து கொண்டார். இருவரும் தலா 69 சிக்சர் அடித்துள்ளனர். முதலிரண்டு இடங்களில் முறையே சேவக் (91), தோனி (78) உள்ளனர்.
2வது இந்திய வீரர்
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்டில், குறைந்த வயதில் (23 ஆண்டு, 184 நாள்) சதம் அடித்த 2வது இந்திய வீரராானார் சுப்மன். கடந்த 2015ல் சிட்னி டெஸ்டில் (22 ஆண்டு, 8 மாதம்) லோகேஷ் ராகுல் குறைந்த வயதில் சதம் அடித்திருந்தார்.
* டெஸ்ட் அரங்கில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 24 வயதுக்குள் சதம் அடித்த 10வது இந்திய வீரரானார்.
நான்காவது இந்தியர்
நடப்பு ஆண்டில் ஒரு நாள் (எதிர்–நியூசி., ஜன. 24, 112 ரன்), ‘டி–20’ (எதிர்–நியூசி., பிப். 1, 126 ரன்), டெஸ்ட் (எதிர்– ஆஸி., மார்ச் 11, 128 ரன்) போட்டிகளில் சுப்மன் சதம் அடித்துள்ளார். இதன் மூலம், ஒரே ஆண்டில் மூன்றுவிதமான போட்டியிலும் சதம் விளாசிய 4வது இந்திய வீரரானார். இதற்கு முன், ரெய்னா (2010), லோகேஷ் ராகுல் (2016), ரோகித் (2017) இம்மைல்கல்லை எட்டினர்.
கோஹ்லி ‘4000’
ஆமதாபாத் டெஸ்டில் அசத்திய, கோஹ்லி சொந்த மண்ணில் 4 ஆயிரம் டெஸ்ட் ரன்களை கடந்த 5வது இந்திய வீரரானார். இதுவரை, 50 போட்டியில் 4017 ரன் எடுத்துள்ளார். முதல் நான்கு இடங்களில் முறையே ஜாம்பவான் சச்சின் (94 போட்டி, 7216 ரன்), டிராவிட் (70, 5598), கவாஸ்கர் (65, 5067), சேவக் (52, 4656) உள்ளனர்.
* கோஹ்லி 14 மாதத்திற்குப்பின் டெஸ்டில் அரை சதம் கடந்துள்ளார். கடைசியாக, கடந்த ஆண்டு ஜனவரியில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான கேப்டவுன் டெஸ்டில் 79 ரன் எடுத்திருந்தார்.
ரோகித் ‘17,000’
ஆமதாபாத் டெஸ்டில் 35 ரன் எடுத்த கேப்டன் ரோகித், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 17 ஆயிரம் ரன்களை கடந்த 6வது இந்திய வீரரானார். இதுவரை 438 போட்டியில் 17014 ரன் குவித்துள்ளார். இவர், டெஸ்டில் 3379 (49 போட்டி), ஒருநாள் போட்டியில் 9782 (241), சர்வதேச ‘டி–20’யில் 3853 (148) ரன் எடுத்துள்ளார்.
ஏற்கனவே, சச்சின் (664 போட்டி, 34357 ரன்), கோஹ்லி (494 போட்டி, 25047), டிராவிட் (504, 24064), கங்குலி (421, 18433), தோனி (535, 17092) இந்த இலக்கை கடந்துள்ளனர்.
* இந்திய மண்ணில் 2000 டெஸ்ட் ரன்களை கடந்தார் ரோகித். இதுவரை 24 போட்டியில் 2002 ரன் எடுத்துள்ளார்.
வெயில் அதிகம்
நேற்றைய ஆட்டத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது. தண்ணீர் இடைவேளை கூடுதலாக தரப்பட்டது. கோஹ்லியும் பேட்டிங் செய்தபோது சில நிமிடம் ஓய்வு எடுத்தார்.