ஜெட்டா: ரசிகர்கள் மெஸ்சிக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியதால் கோபம் அடைந்த ரொனால்டோ, தண்ணீர் பாட்டில்களை உதைத்து தள்ளினார்.
போர்ச்சுகல் கால்பந்து அணி கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ 38. சமீபத்தில் ரூ. 1740 கோடிக்கு சவுதி அரேபியாவின் அல் நாசர் அணியில் இணைந்தார். தற்போது சவுதி புரோபசனல் லீக் தொடரில் பங்கேற்றுள்ளார். ஜெட்டாவில் நடந்த போட்டியில் அல் நாசர், அல் இட்டிஹாத் அணிகள் மோதின. இதில் ரொனால்டோவின் அல் நாசர் அணி 0–1 என தோல்வியடைந்தது.
ரொனால்டோ வருகைக்குப் பின் முதல் தோல்வியடைந்த அல் நாசர் அணி, புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. காலரியில் இருந்து ரசிகர்கள், ரொனால்டோவுக்கு போட்டியாளராக கருதப்படும் அர்ஜென்டினாவின் மெஸ்சிக்கு ஆதரவாக ‘மெஸ்சி... மெஸ்சி’ என கோஷம் எழுப்பினர். இதனால், ரொனால்டோ கோபமடைந்தார்.
கையில் கட்டியிருந்த ‘கேப்டன்’ பாண்டை கழற்றி எறிந்தார். சக வீரர்கள் சமாதானம் செய்த போதும் அங்கு கிடந்த தண்ணீர் பாட்டில்களை காலால் எட்டி உதைத்தார்.
ரொனால்டோ வெளியிட்ட செய்தியில்,‘ போட்டி முடிவு ஏமாற்றம் தருகிறது. அடுத்து வரும் போட்டிகளில் கவனம் செலுத்துவோம். ரசிகர்கள் ஆதரவுக்கு நன்றி,’ என தெரிவித்துள்ளார்.