பெங்களூரு: ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் அன்கிதா, ருடுஜா போசாலே மோதவுள்ளனர்.
இந்தியாவின் பெங்களூருவில் பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் அன்கிதா ரெய்னா, போஸ்னியாவின் தேயாவை எதிர்கொண்டார். முதல் செட்டை அன்கிதா 6–1 என கைப்பற்றினார். ‘டை பிரேக்கர்’ வரை சென்ற அடுத்த செட்டை அன்கிதா 6–7 என இழந்தார். மூன்றாவது, கடைசி செட்டில் போராடிய அன்கிதா 7–5 என வசப்படுத்தினார். முடிவில் அன்கிதா 6–1, 6–7, 7–5 என்ற செட்டில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு காலிறுதியில் இந்தியாவின் ருடுஜா போசாலே, பிரிட்டனின் எடென் சில்வாவை சந்தித்தார். இதில் ருடுஜா, 3–6, 7–6, 6–4 என்ற செட்டில் போராடி வென்றார். இன்று நடக்கும் அரையிறுதியில் அன்கிதா–ருடுஜா மோதவுள்ளனர்.