நாக்பூர்: நாக்பூர் டெஸ்டில் இந்திய பவுலர்கள் அசத்தல் பந்து வீச்சை வெளிப்படுத்த, முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 177 ரன்னுக்கு சுருண்டது. ஜடேஜா 5, அஷ்வின் 3 விக்கெட் சாய்த்தனர். ரோகித் அரைசதம் விளாசினார்.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி நான்கு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் நாக்பூரில் இன்று துவங்கியது. ‘டாஸ்’ வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் கம்மின்ஸ், பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் சூர்யகுமார், ஸ்ரீகர் பரத் அறிமுக வாய்ப்பு பெற்றனர். சுப்மன் கில்லுக்கு இடம் கிடைக்கவில்லை.
ஜடேஜா அபாரம்
ஆஸ்திரேலிய அணிக்கு வார்னர், கவாஜா ஜோடி மோசமான துவக்கம் தந்தது. சிராஜ் ‘வேகத்தில்’ கவாஜா (1), ஷமி ‘வேகத்தில்’ வார்னர் (1) வெளியேறினர். பின் லபுசேன், ஸ்மித் ஜோடி இணைந்து மூன்றாவது விக்கெட்டுக்கு 82 ரன் சேர்த்தனர். போட்டியின் 36வது ஓவரை வீசிய ஜடேஜா, 5, 6 வது பந்தில் லபுசேன் (49), ரென்ஷாவை (0) வீழ்த்தினார்.
தொடர்ந்து அசத்திய ஜடேஜா, ஸ்மித்தை (37) வெளியேற்றினார். அஷ்வின் சுழலில் அலெக்ஸ் கேரி (36), கம்மின்ஸ் (6) வீழ்ந்தனர். ஹேண்ட்ஸ்கோம்ப் 31 ரன் எடுத்தார். கடைசியில் போலந்து (1) போல்டாக ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 177 ரன்னுக்கு சுருண்டது. இந்தியா சார்பில் ஜடேஜா 5, அஷ்வின் 3 விக்கெட் சாய்த்தனர்.
ரோகித் அரைசதம்
அடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா, ராகுல் ஜோடி சூப்பர் துவக்கம் தந்தது. லியான் பந்தை சிக்சருக்கு அனுப்பிய ரோகித், டெஸ்ட் அரங்கில் 15வது அரைசதம் எட்டினார். முதல் விக்கெட்டுக்கு 76 ரன் சேர்த்த போது, அறிமுக வீரர் மர்பி சுழலில் ராகுல் (20) வீழ்ந்தார். முதல் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் இந்தியா 77/1 ரன் எடுத்து 100 ரன் பின்தங்கி இருந்தது. ரோகித் சர்மா (56), அஷ்வின் (0) அவுட்டாகாமல் இருந்தனர். இன்று இரண்டாவது நாள் ஆட்டத்தில் இந்திய பேட்டர்கள் பொறுப்பான ஆட்டத்தை தரும்பட்சத்தில், முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்று, ஆதிக்கம் செலுத்தலாம்.
30
இந்திய வீரர் சூர்யகுமார், 2021 மார்ச் 14ல் சர்வதேச ‘டி–20’, (30 வயது, 181 நாள்), ஜூலை 19ல் ஒருநாள் (30 வயது, 307 நாள்) அரங்கில் அறிமுகம் ஆனார். நேற்று டெஸ்டில் 32 வயது, 148வது நாளில் அறிமுகம் ஆனார். இதையடுத்து 30 வயதுக்குப் பின் மூன்று வித அணியிலும் இடம் பெற்ற முதல் இந்தியர் ஆனார்.
15 ரன் 5 விக்.,
நேற்று ஆஸ்திரேலிய அணி ஒரு கட்டத்தில் 162/5 ரன் என இருந்தது. அடுத்து 15 ரன் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்னில் சுருண்டது.
177
டெஸ்ட் தொடரின் முதல் போட்டி, முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி, 2005க்குப் (எதிர்–இங்கிலாந்து, 195 ரன்) பின் நேற்று 200 ரன்னுக்கும் குறைவாக ஆல் அவுட்டானது (177). இதற்கு முன் 1997ல் 177 ரன்னுக்கும் குறைவாக 118 ல் (இங்கிலாந்து) ஆல் அவுட்டானது.
* ஆசிய மண்ணில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா எடுத்த மூன்றாவது குறைந்த ஸ்கோர் இது (177). இதற்கு முன் 1956ல் 80 (எதிர்–பாக்.,), 2004ல் 120 (இலங்கை) ரன்னில் அவுட்டானது.
389
அஷ்வின், ஜடேஜா இணைந்து விளையாடிய 37 டெஸ்டில், வீழ்த்தப்பட்ட 676 விக்கெட்டுகளில் இந்த ஜோடி மட்டும் 389 விக்கெட் (சராசரி 57.54) கைப்பற்றின. இதில் அஷ்வின் 212, ஜடேஜா 177 விக்கெட் சாய்த்தனர். தவிர அஷ்வின் 16, ஜடேஜா 9 முறை என மொத்தம் 25 முறை 5 அல்லது அதற்கும் மேல் என விக்கெட் வீழ்த்தினர்.
400
இந்திய கிரிக்கெட் அரங்கில் 400 விக்கெட் சாய்த்த ஐந்தாவது வேகப்பந்து வீச்சாளர் ஆனார் முகமது ஷமி. இவர் 217 டெஸ்ட், 159 ஒருநாள், 24 ‘டி–20’ விக்கெட் வீழ்த்தியுள்ளார். முதல் நான்கு இடங்களில் கபில்தேவ் (687), ஜாகிர் கான் (610), ஸ்ரீநாத் (551), இஷாந்த் (434) உள்ளனர்.
450
முதல் இன்னிங்சில் கேரியை அவுட்டாக்கிய அஷ்வின், டெஸ்டில் அதிவேகமாக 450 விக்கெட் சாய்த்த இந்திய பவுலர் வரிசையில் கும்ளேவை (93) முந்தி முதல்வன் ஆனார். அஷ்வின் 89 டெஸ்டில் 452 விக்கெட் வீழ்த்தினார்.
* சர்வதேச அளவில் முரளிதரனுக்கு (80, இலங்கை) அடுத்து, இரண்டாவது இடம் பெற்றார் அஷ்வின்.
* டெஸ்டில் அதிக விக்கெட் சாய்த்த இந்திய பவுலர்களில் கும்ளேவுக்கு (619) அடுத்த இடம் பெற்றார் அஷ்வின் (452). சர்வதேச அளவில் இந்த மைல்கல்லை எட்டிய 9வது பவுலர் ஆனார்.
* பந்துகள் அடிப்படையில் மெக்ராத்துக்கு (23,474 பந்து, ஆஸி.,) அடுத்த இடம் பிடித்தார் அஷ்வின் (23,635).
என்ன கொடுத்தார் சிராஜ்
நேற்றைய போட்டியில் ஜடேஜா பவுலிங் செய்யும் முன், சிராஜ் கையில் இருந்து ஏதோ ஒன்றை எடுத்து, தனது இடதுகை ஆட்காட்டி விரலில் தேய்த்தார். பிறகு பந்து வீசினார். இது குறித்த வீடியோ இணைய தளங்களில் வெளியானது. இதனால் ஜடேஜா பந்தை சேதப்படுத்தினாராஅல்லது விரல் வலியை போக்க மருந்து தடவினாராஎன கேள்வி எழுந்துள்ளது.