நாக்பூர்: இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் டெஸ்ட் தொடர் இன்று துவங்குகிறது. ஆஸ்திரேலிய ‘கங்காருக்கள்’ (தேசிய விலங்கு) விரட்டினாலும் இந்திய ‘புலிகள்’ மிரட்டக் காத்திருக்கின்றனர். பல ‘சீனியர்’ வீரர்களின் எதிர்கால கிரிக்கெட் வாழ்க்கையை முடிவு செய்ய உள்ள இத்தொடரில், சொந்தமண், ‘சுழல்’ என பல சாதகங்களை பயன்படுத்தி இந்தியா சாதிக்க காத்திருக்கிறது.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி மகாராஷ்டிராவின் நாக்பூரில் இன்று துவங்குகிறது.
‘டி–20’ உலக கோப்பை ஏமாற்றம் காரணமாக கேப்டன் பதவியை இழந்த ரோகித் சர்மா, டெஸ்ட் தொடரில் சாதிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். துவக்கத்தில் இவருடன் களமிறங்குவதில் சுப்மன் கில், லோகேஷ் ராகுல் இடையே போட்டி நிலவுகிறது. இதில் மூன்று வித கிரிக்கெட்டிலும் சமீபத்தில் சதம் விளாசிய சுப்மனுக்கு இடம் உறுதி.
கோஹ்லி நம்பிக்கை
டெஸ்ட் ‘ஸ்பெலிஷ்ட்’ புஜாரா வழக்கம் போல அசத்தலாம். இவருடன் கோஹ்லியின் பேட்டிங்கும் இந்தியாவுக்கு கைகொடுக்க வேண்டும். ‘டி–20’ல் விளாசல் வீரராக வலம் வரும் சூர்யகுமார், டெஸ்டில் அறிமுக வாய்ப்புக்காக காத்திருக்கிறார். விக்கெட் கீப்பராக பரத் அறிமுகம் ஆகலாம். ஆனால் இவர் நாதன் லியானின் சுழலை எப்படி சமாளிக்கப் போகிறார் என்று தெரியவில்லை.
அசத்துவாரா அஷ்வின்
‘வேகத்தில்’ ஷமி, சிராஜ் என இருவரும் மிரட்டுகின்றனர். சுழற்பந்துவீச்சில் தமிழகத்தின் அஷ்வின், ஜடேஜா, அக்சர் படேல் கூட்டணி களமிறங்க காத்திருக்கிறது. இந்தியா வந்துள்ள 18 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணியில் 6 வீரர்கள் இடதுகை பேட்டர்களாக இருப்பது அஷ்வினுக்கு சாதகம்.
ஆஸி., எப்படி
ஆஸ்திரேலிய அணி வேகப்பந்துவீச்சாளர் கம்மின்ஸ் தலைமையில் களம் காண்கிறது. இந்திய மண்ணில் கடைசியாக 2004ல் கோப்பை வென்றது. இம்முறை எப்படியும் சாதிக்க திட்டமிட்டுள்ளது. இதற்கேற்ப வார்னர், ஸ்டீவ் ஸ்மித், கவாஜா என இந்திய ஆடுகளங்களை துல்லியமாக கணித்து வைத்திருக்கும் மும்மூர்த்திகள் தயாராக உள்ளனர். ஹெட், லபுசேனும் நம்பிக்கை தருகின்றனர். வேகப்பந்துவீச்சில் ஹேசல்வுட், ஸ்டார்க் காயத்தால் விலகியது பின்னடைவு. ‘சுழலில்’ அனுபவ வீரர் லியான் சவால் தர வாய்ப்புள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான தொடரில், அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் இவர் 3வது இடத்தில் (22 போட்டி, 94 விக்.,) உள்ளார்.
பைனலுக்கு செல்ல...உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் பைனல் ஜூன் மாதம் லண்டனில் நடக்கவுள்ளது. தற்போது ஆஸ்திரேலியா (75.56 சதவீதம்), இந்தியா (58.93), இலங்கை (53.33), தென் ஆப்ரிக்கா (48.72) ‘டாப்–4’ இடத்தில் உள்ளன. வரும் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா குறைந்தபட்சம் ஒரு டெஸ்டில் ‘டிரா’ செய்தால் போதும், பைனலுக்கு முன்னேறலாம்.
இந்திய அணி 3–0, 3–1 என வென்றால் பைனலுக்கு செல்லலாம். மற்றபடி 2–0 என வென்றால் இலங்கை–நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா–வெஸ்ட் இண்டீஸ் தொடரின் முடிவுக்கு ஏற்ப, இந்தியாவின் பைனல் வாய்ப்பு தெரியவரும்.
கிடைக்குமா ‘நம்பர்–1’
இந்திய அணி தற்போது ஒருநாள் (114 புள்ளி), ‘டி–20’ (267) தரவரிசையில் ‘நம்பர்–1’ இடத்தில் உள்ளது. டெஸ்ட் தரவரிசையில் தறபோது ஆஸ்திரேலியா (126), இந்தியா (115), இங்கிலாந்து (107) ‘டாப்–3’ இடத்தில் உள்ளன. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2–0 அல்லது 3–1 என கைப்பற்றினால் 121 புள்ளியுடன் முதலிடத்தை பெறலாம். மூன்று வித கிரிக்கெட்டிலும் ‘நம்பர்–1’ அணி என்ற பெருமை பெறலாம்.