போபால்: கேலோ இந்தியா யூத் விளையாட்டு நீச்சலில் தங்கம் வென்றார் வேதாந்த்.
மத்திய பிரதேசத்தில் ஐந்தாவது கேலோ இந்தியா யூத் விளையாட்டு (22 வயதுக்குட்பட்ட) 8 இடங்களில் நடக்கிறது. 27 வகை விளையாட்டில் 6000க்கும் அதிகமான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். நேற்று ஆண்களுக்கான 200 மீ., நீச்சல் போட்டியில் நடிகர் மாதவன் மகன் வேதாந்த் மஹாராஷ்டிரா அணிக்காக பங்கேற்றார். இதில் 1:55.39 வினாடி நேரத்தில் வந்து முதலிடம் பிடித்த வேதாந்த் தங்கம் வென்று அசத்தினார்.
பெண்கள் 100 மீ., பேக்ஸ்டிரோக் பிரிவில் மஹாராஷ்டிராவின் அபெக் ஷா, 1:13.67 வினாடி நேரத்தில் வந்து முதலிடம் பெற்று, தங்கப்பதக்கம் தட்டிச் சென்றார்.
இதுவரை நடந்த போட்டிகள் முடிவில் 31 தங்கம், 31 வெள்ளி, 28 வெண்கலம் உட்பட 90 பதக்கம் வென்ற மஹராஷ்டிரா பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. மத்திய பிரதேசம் (25 தங்கம், 13 வெள்ளி, 21 வெண்கலம்), ஹரியானா (23 தங்கம், 18 வெள்ளி, 18 வெண்கலம்), அடுத்த இரு இடங்களில் உள்ளன. தமிழக அணி 8 தங்கம், 10 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 28 பதக்கம் வென்று பட்டியலில் 6வது இடத்துக்கு முன்னேறியது.