செஞ்சுரியன்: ‘‘தென் ஆப்ரிக்க ‘டி–20’ தொடரில் வெற்றி பெறும் அணிக்கு தோனி கோப்பை வழங்க வேண்டும்,’’ என ஸ்மித் தெரிவித்துள்ளார்.
தென் ஆப்ரிக்காவில் ஐ.பி.எல்., பாணியிலான எஸ்.ஏ., ‘டி–20’ தொடர் நடக்கிறது. சூப்பர் கிங்ஸ், பிரிட்டோரியா கேபிடல்ஸ் உட்பட ஆறு அணிகள் பங்கேற்கின்றன. இத்தொடர் குறித்து வியாகாம் 18, ஜியோ சினிமா ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில், எஸ்.ஏ., ‘டி–20’ தலைவர், தென் ஆப்ரிக்க அணி முன்னாள் கேப்டன் கிரீம் ஸ்மித் 42, அளித்த பிரத்யேக பேட்டி:
* எஸ்.ஏ., ‘டி–20’ தொடரில் களமிறங்கும் 11 பேர் விபரங்களை ‘டாஸ்’ வென்ற பிறகு தெரிவித்தால் போதும், வென்ற அணிக்கு 4 புள்ளி போன்ற விதிகளை, ஐ.பி.எல்., தொடரில் அறிமுகம் செய்ய பரிந்துரை செய்வீர்களா?
இது எங்களுக்கான விதிகள். இந்திய கிரிக்கெட் போர்டை (பி.சி.சி.ஐ.,) பொறுத்தவரையில் அதற்கென தனி விதிகளை பின் பற்றி வருகிறது.
* இந்திய வீரர்கள் எஸ்.ஏ., ‘டி–20’ தொடரில் இடம் பெறுவரா?
ஐ.பி.எல்., அணி உரிமையாளர்கள் தான் இத்தொடரில் பங்கேற்றுள்ளனர். இந்திய வீரர்களுக்கு பி.சி.சி.ஐ., தான் அனுமதி கொடுக்க வேண்டும். இதற்காக நாங்கள் நிர்ப்பந்தம் செய்யப் போவதில்லை. ஒருவேளை வாய்ப்பு கிடைத்தால், அது இந்திய இளம் வீரர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமாக அமையும்.
* இந்திய அணி முன்னாள் கேப்டன் தோனியை அழைப்பீர்களா?
தோனி தற்போது ஐ.பி.எல்., தொடருக்கு தயாராகி வருகிறார். இம்முறை தென் ஆப்ரிக்கா வர வாய்ப்பில்லை. வெற்றி பெற்ற அணிக்கு கோப்பை வழங்க அடுத்தமுறை இவர் தென் ஆப்ரிக்கா வரலாம். இவரும், டிவிலியர்சும் சேர்ந்து கோப்பை வழங்க வேண்டும் என விரும்புகிறேன்.