மெல்போர்ன்: ஆஸ்திரேலிய வீரர் பின்ச் சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து விடை பெற்றார்.
ஆஸ்திரேலிய ‘டி–20’ அணி கேப்டனாக இருந்தவர் ஆரோன் பின்ச், 36. துவக்க வீரரான இவர், ‘மின்னல்’ வேகத்தில் ரன் சேர்ப்பதில் கைதேர்ந்தவர். இதுவரை 5 டெஸ்ட் (278 ரன்), 146 ஒரு நாள் (5406), 103 ‘டி–20’ (3120) போட்டிகளில் விளையாடி உள்ளார். சர்வதேச ‘டி–20’ போட்டிகளில் அதிக முறை (76) கேப்டனாக இருந்தவர்.
கடந்த 2021ல் நடந்த ‘டி–20’ உலக கோப்பையில் அணிக்கு சாம்பியன் பட்டம் வென்று தந்தார். கடந்த செப்., மாதம் ஒரு நாள் போட்டியிலிருந்து ஓய்வு பெற்றார். 2022ல் சொந்த மண்ணில் நடந்த ‘டி–20’ உலக கோப்பையில் ஆஸ்திரேலியா லீக் சுற்றுடன் திரும்பியது. தற்போது சர்வதேச ‘டி–20’ போட்டியிலிருந்தும் ஓய்வை அறிவித்துள்ள பின்ச், சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து விடை பெற்றார்.
பின்ச் கூறுகையில், ‘‘2015 (50 ஓவர்), 2021 (‘டி–20’) என இரண்டு உலக கோப்பை வென்ற அணியில் இடம்பெற்றது மகிழ்ச்சி. தற்போது சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறேன். அடுத்த ‘டி–20’ உலக கோப்பைக்கு (2024) முன், புதிய கேப்டனை தேர்வு செய்ய அணிக்கு அவகாசம் கிடைத்துள்ளது. ‘பிக் பாஷ்’ லீக், மற்ற நாடுகளில் நடக்கும் ‘டி–20’ லீக் தொடர்களில் தொடர்ந்து விளையாடுவேன்,’’ என்றார்.