புதுடில்லி: பெண்கள் கிரிக்கெட் ஏலத்தில் மொத்தம் 409 வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.
இந்திய கிரிக்கெட் போர்டு சார்பில் ஐ.பி.எல்., பாணியில் பெண்கள் பிரிமியர் (டபிள்யு.பி.எல்.,) தொடர் மார்ச் 4 முதல் 24 வரை நடக்கவுள்ளது. 25 நாளில், 22 போட்டி நடக்கும். ஆமதாபாத், மும்பை, பெங்களூரு, டில்லி, லக்னோ என ஐந்து அணிகள் பங்கேற்க உள்ளன. போட்டிகள் மும்பை, நவி மும்பையில் நடக்கும்.
இதற்கான வீராங்கனைகள் ஏலம் பிப். 13 மும்பை, ‘பிளஸ் சவுத்’ ஓட்டலில் நடக்கவுள்ளது. ஒவ்வொரு அணியும் ரூ. 12 கோடி வரை செலவிடலாம். ஒரு அணியில் குறைந்தபட்சம் 15, அதிகபட்சம் 18 பேர் வரை இடம் பெறவுள்ளனர்.
ஏலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்த நிலையில், இறுதிக்கட்டமாக 409 பேர் பங்கேற்க உள்ளனர். இதில் இந்தியா சார்பில் 246 பேர், 163 அன்னிய அணி வீராங்கனைகள், 8 பேர் உறுப்பு அணிகளில் இருந்து இடம் பெற்றனர். இதில் 202 பேர் சர்வதேச போட்டிகளில் அறிமுகம் ஆகாதவர்கள். ஏலத்தில் 30 அன்னிய வீராங்கனைகள் உட்பட மொத்தம் 90 பேர் தேர்வு செய்யப்படுவர்.
அதிகபட்சம் ரூ. 50 லட்சம் அடிப்படைத் தொகையில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா, ஹர்மன்பிரீத் கவுர், தீப்தி சர்மா, ஷபாலி வர்மா உட்பட 24 பேர் இடம் பெற்றுள்ளனர்.