இந்துார்: ரஞ்சி கோப்பை அரையிறுதிக்கு பெங்கால், ம.பி., கர்நாடகா அணிகள் முன்னேறின.
இந்தியாவில் ரஞ்சி கோப்பை தொடரின் 88வது ‘சீசன்’ நடக்கிறது. ம.பி.,யின் இந்துாரில் நடந்த நான்காவது காலிறுதியில் ஆந்திரா, ம.பி., அணிகள் மோதின. முதல் இன்னிங்சில் ஆந்திரா 379, ம.பி., 228 ரன்கள் எடுத்தன. ஆந்திரா 2வது இன்னிங்சில் 93 ரன்கள் எடுத்தது. 245 ரன்கள் இலக்குடன், 2வது இன்னிங்சை துவக்கிய ம.பி., அணி விக்கெட் இழப்பின்றி 58 ரன்கள் எடுத்திருந்தது.
நேற்றைய நான்காம் நாள் ஆட்டத்தில், ஹிமாசன்சு (31) விரைவில் திரும்பினார். துபே (58), ரஜத் (55) அரை சதம் கடந்து கைகொடுத்தனர். கேப்டன் ஆதித்யா ஸ்ரீவஸ்தவா 2 ரன்களில் அவுட்டானார். ம.பி., அணி 2வது இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 245 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சரன்ஸ் (28), ஹர்ஷ் (18) அவுட்டாகாமல் இருந்தனர்.
பெங்கால் ‘ஜோர்’
கோல்கட்டாவின் ஈடன் கார்டனில் நடந்த காலிறுதியில் பெங்கால், ஜார்க்கண்ட் அணிகள் மோதின. முதல் இன்னிங்சில் ஜார்க்கண்ட் 173, பெங்கால் 328 ரன்கள் எடுத்தன. மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில், ஜார்க்கண்ட் 2வது இன்னிங்சில் 162/7 ரன்கள் எடுத்திருந்தது.
நான்காம் நாள் ஆட்டத்தில் ஜார்க்கண்ட் 2வது இன்னிங்சில் 221 ரன்களுக்கு சுருண்டது. 67 ரன்கள் இலக்குடன் 2வது இன்னிங்சை துவக்கிய பெங்கால், ஒரு விக்கெட்டுக்கு 69 ரன்கள் எடுத்து, 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடந்த காலிறுதியில், முதல் இன்னிங்சில் உத்தரகாண்ட் 116, கர்நாடகா 606 ரன்கள் எடுத்தன.
கடைசி நாள் ஆட்டத்தில் உத்தரகாண்ட் அணி 2வது இன்னிங்சில் 209 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி வீழ்ந்தது. கர்நாடகா இன்னிங்ஸ், 281 ரன்கள் வித்தியாசத்தில் வென்று அரையிறுதிக்குள் நுழைந்தது.
யாருக்கு வெற்றிகுஜராத்தின் ராஜ்கோட்டில் நடக்கும் 3வது காலிறுதியில், முதல் இன்னிங்சில் சவுராஷ்டிரா 303, பஞ்சாப் 431 ரன்கள் எடுத்தன. சவுராஷ்டிரா 2வது இன்னிங்சில் 379 ரன்கள் எடுத்தது. 252 ரன்கள் இலக்குடன், பஞ்சாப் அணி 2வது இன்னிங்சை துவக்கியது. ஆட்ட நேர முடிவில், 2 விக்கெட்டுக்கு 52 ரன்கள் எடுத்திருந்தது. புக்ராஜ் (17), சித்தார்த் (2) அவுட்டாகாமல் இருந்தனர்.