புதுடில்லி: கடந்த 2007ல் ‘டி–20’ உலக கோப்பை பைனல் ஓவரில் ஹீரோவாக ஜொலித்த வேகப்பந்துவீச்சாளர் ஜோகிந்தர் சர்மா ஓய்வு அறிவித்தார்.
தென் ஆப்ரிக்காவில் கடந்த 2007ல் முதல் ‘டி–20’ உலக கோப்பை தொடர் நடந்தது. இதன் பைனலில் தோனி தலைமையிலான இந்திய அணி, பாகிஸ்தானை சந்தித்தது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 157/5 ரன் எடுத்தது.
பின் களமிறங்கிய பாகிஸ்தான் அணி கைவசம் 1 விக்கெட் உள்ள நிலையில், கடைசி ஓவரில் வெற்றிக்கு 13 ரன் தேவைப்பட்டன. ஹர்பஜன் சிங், யூசுப் பதான் என ‘சீனியர்’ இருந்த போதும், கேப்டன் தோனி, 20வது ஓவரை வீச வேகப்பந்துவீச்சாளர் ஜோகிந்தர் சர்மாவை அழைத்தார்.
நம்பிக்கையை வீணடிக்காத ஜோகிந்தர் சர்மா, மூன்றாவது பந்தில் பாகிஸ்தானின் மிஸ்பாவை அவுட்டாக்கி ‘திரில்’ வெற்றி தேடித்தந்தார். இந்திய அணி உலக கோப்பையை கைப்பற்றியது. இவரை பாராட்டும் விதமாக, ஹரியானா மாநில அரசு காவல்துறையில் பணி வழங்கியது. தற்போது டி.எஸ்.பி., ஆக பணிபுரிந்து வருகிறார்.
2004ல் வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகம் ஆன இவர் தற்போது அனைத்து வித கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றார்.
ஜோகிந்தர் 39, கூறுகையில்,‘‘அனைத்துவித கிரிக்கெட்டிலிருந்தும் விடை பெறுகிறேன். இதுவரை ஆதரவு தந்த வீரர்கள், பயிற்சியாளர் குழு அனைவருக்கும் நன்றி,’’ என்றார்.
4ஜொகிந்தர் சர்மா 2004ல் வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகம் ஆனார். 2007 ‘டி–20’ உலக கோப்பை பைனல் தான் இவரது கடைசி போட்டி. இதன் பின் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவே இல்லை. மொத்தம் 4 ஒருநாள் (35 ரன், 1 விக்.,) 4 ‘டி–20’ ல் (4 விக்.,) மட்டும் விளையாடினார். ஐ.பி.எல்., அரங்கில் சென்னை அணிக்காக 2008–12ல் விளையாடினார்.