ஆலுார்: இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சாதிக்க அஷ்வினைப் போல பந்து வீசும் வீரரை அழைத்து வந்து பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர் ஆஸ்திரேலிய வீரர்கள்.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பிப். 9 முதல் மார்ச் 13 வரை) பங்கேற்க உள்ளது. முதல் டெஸ்ட் பிப். 9–13ல் நாக்பூரில் நடக்கவுள்ளது. அடுத்த மூன்று போட்டிகள் டில்லி (பிப். 17–21), தர்மசாலா (மார்ச் 1–5), ஆமதாபாத்தில் (மார்ச் 9–13) நடக்கவுள்ளன.
இதற்கான கம்மின்ஸ் தலைமையிலான 18 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி வீரர்கள், பெங்களூரு ஆலுர் மைதானத்தில் 4 நாள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆஸ்திரேலியாவை பொறுத்தவரையில் 2004க்குப் பின் இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றது இல்லை. வரும் தொடரில் சுழற்பந்துவீச்சு முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் அஷ்வின், ஜடேஜா, அக்சர் படேல் கூட்டணியை சமாளிக்க பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகின்றனர். அக்சர் படேல் பந்துவீசும் வீடியோவை ஆராய்ந்து இதற்கேற்ப பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டனர்.
அஷ்வின் போல...
புதிய முயற்சியாக அஷ்வின் போல பந்து வீசும் பரோடா வீரர் மகேஷ் பித்யாவை 21, அழைத்துள்ளனர். சமீபத்தில் ரஞ்சி கோப்பை தொடரில் அறிமுகம் ஆன மகேஷிற்கு, அஷ்வின் தான் ஆஸ்தான ‘ஹீரோ’. இவரைப் போல டெஸ்ட் தொடரில் பங்கேற்க முடியவில்லை என்றாலும், ஆஸ்திரேலிய அணி வீரர்களுக்கு பந்து வீசும் வாய்ப்பை பெற்றுள்ளார் மகேஷ்.
ரஞ்சி போட்டியில் இவர் பந்து வீசியதைப் பார்த்து, பெங்களூரு அழைத்தனர். இங்கு ஆஸ்திரேலிய வீரர்களுடன் ஒரே ஓட்டலில் தங்கியுள்ள மகேஷ், ஒரே பஸ்சில் பயிற்சிக்கு சென்று வருகிறார். ஸ்டீவ் ஸ்மித், லபுசேன் உள்ளிட்டோருக்கு பந்து வீசி, கவர்ந்துள்ளார்.
பந்துவீச்சை மாற்றினால்...
இந்திய அணி முன்னாள் வீரர் தமிழகத்தின் அபினவ் முகுந்த் கூறுகையில், ‘‘அஷ்வினைப் போல இப்போது பலர் வந்து விட்டனர். இந்திய கிரிக்கெட்டில் அவர் ஏற்படுத்திய தாக்கத்தையே இது காட்டுகிறது. ஆஸ்திரேலிய அணிக்கு இது உதவுமா எனத் தெரியவில்லை. ஒருவேளை அஷ்வின் பவுலிங் ‘ஸ்டைலை’ மாற்றி விட்டால் என்ன செய்வது,’’ என்றார்.
8 சுழற்பந்துவீச்சாளர்கள்
இந்திய அணி வீரர்கள் நாக்பூரில் நேற்று பயிற்சியை துவக்கினர். இந்திய அணிக்கு துவக்கம் தருவர் என எதிர்பார்க்கப்படும் கேப்டன் ரோகித், சுப்மன் கில் இணைந்து பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டனர். ராகுல், கோஹ்லி, புஜாரா, ஜடேஜா, விக்கெட் கீப்பர் பரத்தும் பங்கேற்றனர்.
அஷ்வின், ஜடேஜா, அக்சர், குல்தீப்புடன் தமிழகத்தின் வாஷிங்டன் சுந்தர், சாய் கிஷோர், ராகுல் சகார், சவுரப் குமார் என மொத்தம் 8 சுழற்பந்து வீச்சாளர்கள் வலைப்பயிற்சியில் பந்து வீசி வருகின்றனர். நான்கு நாள் பயிற்சிக்குப் பின் முதல் டெஸ்ட் நடக்கவுள்ள ஜம்தா மைதானம் செல்லவுள்ளனர்.
சொந்த மண் ஆதிக்கம்
கடந்த 10 ஆண்டுகளில் சொந்தமண்ணில் இரு தரப்பு அணிகளுக்கு இடையிலான 56 தொடர்களில் இந்தியா பங்கேற்றது. இதில் இந்தியா 48ல் வெற்றி பெற்று கோப்பை கைப்பற்றியது. ஐந்து தொடர் சமன் ஆகின. 2015ல் தென் ஆப்ரிக்கா (ஒரு நாள், ‘டி–20’), 2019ல் ஆஸ்திரேலியாவுக்கு (‘டி–20’) எதிராக என 3 தொடரை மட்டும் இழந்தது.
டெஸ்ட் போட்டிகளை பொறுத்தவரையில் கடந்த 10 ஆண்டுகளில் இந்திய அணி சொந்தமண்ணில் களமிறங்கிய 42 போட்டியில் 34ல் வென்றது. 6 போட்டி ‘டிரா’ ஆக, 2ல் மட்டும்தான் தோற்றது.