பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக்கில் ரஷ்யா, பெலாரஸ் பங்கேற்றால் உக்ரைன் உட்பட 40 க்கும் மேற்பட்ட நாடுகள் ஒலிம்பிக்கை புறக்கணிக்க முடிவு செய்துள்ளன.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 33வது ஒலிம்பிக் போட்டி 2024, ஜூலை 26–ஆக. 11 வரை நடக்கவுள்ளது. மொத்தம் 10,500 விளையாட்டு நட்சத்திரங்கள் பங்கேற்க உள்ளனர். இதுகுறித்து சமீபத்தில் சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் வெளியிட்ட செய்தியில்,‘ ரஷ்யா, பெலாரஸ் வீரர், வீராங்கனைகள் பாரிஸ் ஒலிம்பிக்கில் ஒலிம்பிக் கொடியுடன் பங்கேற்கலாம். இதற்கான முயற்சிகள் நடக்கின்றன,’ என தெரிவித்தது.
ஆனால் உக்ரைன் மீது 2022 பிப்., 24ல் போர் தொடுத்ததால் ரஷ்யா விளையாட்டு நட்சத்திரங்கள் ஐரோப்பிய தொடர்களில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டனர். தற்போது ரஷ்யா, ஆதரவு தந்த பெலாரசிற்கு ஒலிம்பிக்கில் பங்கேற்க அனுமதி தருவதற்கு உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
உக்ரைன் விளையாட்டு அமைச்சர் கட்டாசெய்த் கூறுகையில்,‘‘போர் நீடிக்கும் வரை ரஷ்யா, பெலாரஸ் நட்சத்திரங்களை எங்கும் பார்க்க விரும்பவில்லை. பாரிஸ் ஒலிம்பிக்கில் இருந்து விலகுவதைத் தவிர வேறு வழியில்லை,’’ என்றார். இதுபோல பிரிட்டன், எஸ்தோனியா, போலந்து உட்பட 40 நாடுகள் பாரிஸ் ஒலிம்பிக்கை புறக்கணிக்க திட்டமிட்டு வருகின்றன.