பெங்களூரு: அக்சர் படேலின் ‘சுழலை’ சமாளிக்க, ஆஸ்திரேலிய வீரர்கள் பிரத்யேக பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பிப். 9 முதல் மார்ச் 13 வரை) பங்கேற்க உள்ளது. முதல் டெஸ்ட் பிப். 9–13ல் நாக்பூரில் நடக்கவுள்ளது. அடுத்த மூன்று போட்டிகள் டில்லி (பிப். 17–21), தர்மசாலா (மார்ச் 1–5), ஆமதாபாத்தில் (மார்ச் 9–13) நடக்கவுள்ளன.
இதற்குத் தயாராகும் வகையில் கம்மின்ஸ் தலைமையிலான 18 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி வீரர்கள், பெங்களூரு ஆலுர் மைதானத்தில் 4 நாள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் அஷ்வின், ஜடேஜா, குல்தீப் சுழலை சமாளிக்க சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் பேட்டிங் செய்து வருகின்றனர்.
இவர்களுக்கு வலைப்பயிற்சியில் பந்து வீச, நடப்பு ரஞ்சி கோப்பை தொடரில் 32 விக்கெட் (7 போட்டி) சாய்த்த காஷ்மீர் சுழற்பந்து வீச்சாளர் அபித் முஷ்தாக் அழைக்கப்பட்டுள்ளார்.
அக்சர் பயம்
இதனிடையே, இந்திய டெஸ்ட் அணியில் சமீபத்திய போட்டிகளில் எழுச்சி பெற்றுள்ள அக்சர் படேலை சமாளிப்பது எப்படி எனவும் திட்டமிட்டு வருகின்றனர். இதுவரை 8 டெஸ்டில் 47 விக்கெட் சாய்த்துள்ள அக்சர், அச்சுறுத்தலாக இருப்பார் என ஆஸ்திரேலிய வீரர்கள் கருதுகின்றனர்.
இதனால் அக்சர் எந்த இடத்தில், எப்படி பந்தை ‘பிட்ச்’ செய்கிறார், பந்தில் எந்தளவுக்கு திருப்பம் தருகிறார், எவ்வளவு உயரத்துக்கு ‘பவுன்ஸ்’ செய்கிறார் என வீடியோவை ஆராய்ந்து, அதற்கேற்ப பயிற்சி செய்து வருகின்றனர். தவிர சுழலுக்கு சாதகமான ஆடுகளம், சேதமடைந்த ஆடுகளம், பந்துகள் எகிறும் ஆடுகளங்களிலும் பேட்டிங் பயிற்சி செய்கின்றனர்.
வருகிறார் மோடி
இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் நான்காவது, கடைசி டெஸ்ட் குஜராத்தின் ஆமதாபாத்தில் உள்ள உலகின் பெரிய மோடி மைதானத்தில் மார்ச் 9–13ல் நடக்கவுள்ளது. இப்போட்டியை நேரில் காண இந்திய பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி அல்பானெசே வரவுள்ளனர். மைதானம் மறு சீரமைக்கப்பட்டு மோடி பெயர் வைக்கப்பட்ட பிறகு, பிரதமர் மோடி பங்கேற்கும் முதல் நிகழ்வாக இது அமையவுள்ளது.
ஜடேஜாவுக்கு அனுமதி
ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான களமிறங்கும் இந்திய ‘லெவன்’ அணியில் சுழற்பந்து வீச்சு ‘ஆல் ரவுண்டர்’ ஜடேஜா இடம் பெறவுள்ளார். முழங்கால் ஆப்பரேஷனில் இருந்து மீண்ட இவர், சமீபத்தில் சென்னையில் நடந்த ரஞ்சி போட்டியில் தமிழகத்துக்கு எதிராக 8 விக்கெட் சாய்த்தார். இதனால் தேசிய கிரிக்கெட் அகாடமி அனுமதி வழங்கியது.
பும்ரா பவுலிங்
இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் பும்ரா. முதுகுப்பகுதி காயம் காரணமாக 2022 ஆக., முதல் போட்டிகளில் பங்கேற்கவில்லை. 5 மாதத்துக்குப் பின் இலங்கை தொடரில் சேர்க்கப்பட்ட பும்ரா, பிறகு நீக்கப்பட்டார். தற்போது காயத்தில் இருந்து முழுமையாக மீண்ட பும்ரா, பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் பவுலிங் பயிற்சியை துவக்கினார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் கடைசி இரு டெஸ்டில் பங்கேற்க வாய்ப்புள்ளது.