கேப்டவுன்: உலக கோப்பை தொடரின் (19 வயது) அரையிறுதிக்கு ஷபாலி வர்மா தலைமையிலான இந்திய பெண்கள் அணி முன்னேறியது.
தென் ஆப்ரிக்காவில் 19 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான ஐ.சி.சி., ‘டி–20’ உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் சீசன் நடக்கிறது. தற்போது ‘சூப்பர்–6’ சுற்று போட்டிகள் நடக்கின்றன. இந்திய அணி ‘குரூப் 1’ ல் இடம் பெற்றுள்ளது. நேற்று இப்பிரிவில் நடந்த ‘சூப்பர்–6’ போட்டியில் தென் ஆப்ரிக்க அணி (134/7), இலங்கையை (133/8) 1 ரன்னில் வென்றது.
இதையடுத்து புள்ளிப்பட்டியலில் இந்திய அணி (3 வெற்றி, 1 தோல்வி) 6 புள்ளி, 2.844 ரன்ரேட்டுடன் முதல் இடத்தை தக்கவைத்து, அரையிறுதிக்கு முன்னேறியது.
ஆஸ்திரேலியா (6 புள்ளி, ரன்ரேட் 2.210), தென் ஆப்ரிக்கா (6, 0.387), வங்கதேச (4, 0.251) அணிகள் அடுத்த மூன்று இடத்தில் உள்ளன. ரன்ரேட்டில் பின்தங்கிய தென் ஆப்ரிக்கா வெளியேறியது.
இன்று வங்கதேச அணி, தனது கடைசி போட்டியில் எமிரேட்சை சந்திக்கிறது. இதில் இமாலய வெற்றி பெற்றால், ஆஸ்திரேலியாவை பின்தள்ளி, ‘டாப்–2’ இடம் பிடித்து அரையிறுதிக்கு செல்லலாம்.