புவனேஸ்வர்: உலக கோப்பை ஹாக்கி அரையிறுதிக்கு ஆஸ்திரேலியா, பெல்ஜியம் அணிகள் முன்னேறின.
இந்தியாவில் 15வது உலக கோப்பை ஹாக்கி தொடர் (ஒடிசா) நடக்கிறது. ‘கிராஸ் ஓவர்’ போட்டியில் நியூசிலாந்திடம் தோற்ற இந்திய அணி காலிறுதி வாய்ப்பை இழந்தது. நேற்று காலிறுதி போட்டிகள் நடந்தன.
புவனேஸ்வரில் நடந்த முதல் போட்டியில் மூன்று முறை சாம்பியன் ஆஸ்திரேலியா (1986, 2010, 2014) ஸ்பெயின் அணிகள் மோதின. போட்டி துவங்கிய 20 வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் ஜிஸ்பெர்ட் முதல் கோல் அடித்தார். 24வது நிமிடத்தில் மீண்டும் மிரட்டிய ஸ்பெயின் அணிக்கு ரெகேசன்ஸ் ஒரு கோல் அடித்து கைகொடுத்தார். முதல் பாதியின் கடைசி நிமிடத்தில் ஆஸ்திரேலிய அணி வீரர் ஆகில்வே ஒரு கோல் அடித்த போதும், ஸ்பெயின் அணி 2–1 என முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதி துவங்கிய சில நிமிடங்களில் ஆஸ்திரேலிய வீரர்கள் எழுச்சி பெற்றனர். 32வது நிமிடத்தில் ஜலேவ்ஸ்கி ஒரு கோல் அடிக்க, அடுத்த நிமிடம் கிடைத்த ‘பெனால்டி கார்னர்’ வாய்ப்பில் ஹேவர்டு (33 வது) தன் பங்கிற்கு ஒரு கோல் அடித்தார். ஆஸ்திரேலிய அணி 3–2 என முந்தியது. தொடர்ந்து மிரட்டிய ஹேவர்டு, 37 வது நிமிடத்தில் மற்றொரு கோல் அடித்து உதவினார்.
ஸ்பெயின் தரப்பில் 41வது நிமிடம் மிராலெஸ் ஒரு கோல் அடித்தார். முடிவில் ஆஸ்திரேலிய அணி 4–3 என்ற கணக்கில் வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறியது.
பெல்ஜியம் கலக்கல்
மற்றொரு காலிறுதியில் நடப்பு சாம்பியன் பெல்ஜியம், நியூசிலாந்து அணிகள் மோதின. 11வது நிமிடம் பெல்ஜியத்தின் டாம் பூன் முதல் கோல் அடித்தார். 16வது நிமிடத்தில் புளோரன்ட் ஒரு கோல் அடித்தார். இதன் பின் இரு அணி தரப்பிலும் கோல் அடிக்கப்படவில்லை. முடிவில் பெல்ஜியம் 2–0 என வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.
12
உலக கோப்பை ஹாக்கியில் 12வது முறையாக அரையிறுதிக்கு முன்னேறியது ஆஸ்திரேலியா. 1978க்குப் பின் தொடர்ந்து 11வது முறையாக அரையிறுதிக்கு சென்றது.