துபாய்: ஐ.சி.சி., கனவு பெண்கள் ஒருநாள் அணி கேப்டனாக இந்தியாவின் ஹர்மன்பிரீத் கவுர் தேர்வு செய்யப்பட்டார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் 2022ல் சிறப்பாக செயல்பட்ட வீரர், வீராங்கனைகள் அடிப்படையில் கனவு பெண்கள் ஒருநாள் அணி பட்டியல் வெளியானது. இந்தியா சார்பில் மூன்று வீராங்கனைகள் இடம் பெற்றனர்.
இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், கனவு அணி கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார். கடந்த ஆண்டு இரண்டு சதம், ஐந்து அரைசதம் விளாசிய இவர், பந்துவீச்சில் 5 விக்கெட்டுகம் கைப்பற்றியதால் இந்த கவுரவம் கிடைத்தது.
துவக்க வீராங்கனையாக இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா இடம் பெற்றார். இவர் ஒரு சதம், 6 அரைசதம் அடித்து இருந்தார். வேகப்பந்து வீச்சாளர் ரேணுகாவும் இதில் சேர்க்கப்பட்டுள்ளார். 2022ல் அறிமுகம் ஆன இவர், 7 போட்டியில் 18 விக்கெட் சாய்த்து அசத்தினார். ஏற்கனவே பெண்கள் கனவு ‘டி–20’ அணியில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா, தீப்தி சர்மா, ரேணுகா சிங் தேர்வு செய்யப்பட்டு இருந்தனர்.
டெஸ்டில் ரிஷாப்
ஐ.சி.சி., கனவு டெஸ்ட் அணியில் இந்திய அணி விக்கெட் கீப்பர் ரிஷாப் பன்ட் மட்டும் இடம் பெற்றார். கேப்டனாக இங்கிலாந்தின் ஸ்டோக்ஸ் தேர்வு செய்யப்பட்டார்.
ஸ்ரேயாஸ் இடம்
ஐ.சி.சி., கனவு ஆண்கள் ஒருநாள் அணியில் இந்திய அணியின் ஸ்ரேயாஸ் ‘மிடில் ஆர்டர்’ வீரராக இடம் பெற்றார். முகமது சிராஜுக்கு வேகப்பந்து வீச்சாளர் வரிசையில் இடம் கிடைத்தது.
கனவு அணிகள் விபரம் (பேட்டிங் வரிசையில்)
* பெண்கள் ஒருநாள் அணி
அலிசா ஹீலே (விக்கெட் கீப்பர், ஆஸி), மந்தனா, லாரா (தெ.ஆப்.,) நடாலியே ஷிவர் (இங்கிலாந்து), பேத் மூனே (ஆஸி.,) ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), அமேலியா கெர் (நியூசி.,), சோபி எக்லஸ்டோன் (இங்கிலாந்து), அயாபோங்கா (தெ.ஆப்.,), ரேணுகா சிங், ஷப்னம் இஸ்மாயில் (தெ.ஆப்.,).
* ஆண்கள் ஒருநாள் அணி
பாபர் ஆசம் (கேப்டன், பாக்.,), டிராவிஸ் ஹெட் (ஆஸி.,), ஷாய் ஹோப் (வெ. இண்டீஸ்), ஸ்ரேயாஸ், டாம் லதாம் (நியூசி., விக்கெட் கீப்பர்), சிக்கந்தர் ராஜா (ஜிம்பாப்வே), மெஹிதி ஹசன் (வங்கதேசம்), அல்ஜாரி ஜோசப் (வெ.இண்டீஸ்), முகமது சிராஜ், டிரன்ட் பவுல்ட் (நியூசி.,), ஆடம் ஜாம்பா (ஆஸி.,).
* டெஸ்ட் அணி
கவாஜா (ஆஸி.,), பிராத்வைட் (வெ.இண்டீஸ்), லபுசேன் (ஆஸி.,), பாபர் ஆசம் (பாக்.,), பேர்ஸ்டோவ், ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து, கேப்டன்), ரிஷாப் பன்ட், கம்மின்ஸ் (ஆஸி.,), ரபாடா (தெ.ஆப்.,), லியான் (ஆஸி.,), ஆண்டர்சன் (இங்கிலாந்து).