மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதிக்கு பெலாரசின் அசரன்கா முன்னேறினார்.
நடப்பு ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் மெல்போர்னில் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் அமெரிக்காவின் கோர்டா, ரஷ்யாவின் கரேன் கச்சானோவ் மோதினர். கோர்டா முதல் முறையாக கிராண்ட்ஸ்லாம் காலிறுதியில் பங்கேற்றார். ஆனால், எதிர்பார்ப்புக்கு மாறாக இவர் முதல் செட்டை 6–7 என போராடி இழந்தார். இரண்டாவது செட்டையும் கச்சானோவ் 6–3 என தனதாக்கினார். மூன்றாவது செட்டில் கோர்டா 0–3 என பின்தங்கி இருந்தபோது, வலது மணிக்கட்டு காயத்தால் வெளியேறினார். இதனையடுத்து கச்சானோவ் 7–6, 6–3, 3–0 என வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இத்தொடரில் முதல் முறையாக அரையிறுதிக்குள் நுழைந்தார்.
மற்றொரு காலிறுதியில் கிரீசின் ஸ்டெபானஸ் சிட்சிபாஸ் 6–3, 7–6, 6–4 என செக் குடியரசின் ஜெரி லெகாகாவை தோற்கடித்தார்.
ரிபாகினா வெற்றி
பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் பெலாரசின் அசரன்கா, அமெரிக்காவின் ஜெசிக்காவை சந்தித்தார். 33 வயதான முன்னாள் சாம்பியனான அசரன்கா 6–4, 6–1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். இத்தொடரில் 10 ஆண்டுக்குப்பின் அரையிறுதிக்கு முன்னேறினார். கடைசியாக 2013ல் இத்தொடரில் கோப்பை வென்றிருந்தார்.
மற்றொரு காலிறுதியில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா 6–2, 6–4 என லாட்வியாவின் ஆஸ்டபென்கோவை வீழ்த்தினார்.
மகனுக்காக...
பெலாரஸ் வீராங்கனை அசரன்கா, காதலரை பிரிந்ததால் 7 வயது மகன் லியோவை தனிநபராக வளர்க்கிறார். பிரான்சின் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (பி.எஸ்.ஜி.,) கால்பந்து கிளப் அணியின் ரசிகராக லியோ உள்ளார். மகனை மகிழ்ச்சிபடுத்த ஒவ்வொரு போட்டி முடிந்தபின் பி.எஸ்.ஜி., ‘ஜெர்சியை’ அணிகிறார். அசரன்கா கூறுகையில்,‘‘ நான் ஆஸ்திரேலிய ஓபனில் விளையாடுவது லியோவுக்கு தெரிய வாய்ப்பில்லை. கால்பந்து போட்டிகளை மட்டுமே பார்க்கிறான். நான் எப்போது வீட்டிற்கு திரும்புவேன் என காத்திருப்பான்,’’ என்றார்.
சானியா–போபண்ணா யோகம்
கலப்பு இரட்டையர் காலிறுதியில் இந்தியாவின் சானியா–போபண்ணா ஜோடி, லாட்வியாவின் ஆஸ்டபென்கோ–ஸ்பெயினின் டேவிட் ஜோடியுடன் மோதுவதாக இருந்தது. ஆனால், காயம் காரணமாக எதிரணி ஜோடி போட்டியிலிருந்து விலகியது. சானியா– போபண்ணா ஜோடி அரையிறுதிக்குள் நுழைந்தது.