சென்னை: தமிழக அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை லீக் போட்டியில் ரவிந்திர ஜடேஜா பவுலிங் செய்தார்.
ரஞ்சி கோப்பை (4 நாள்) தொடரின் 88வது ‘சீசன்’ நடக்கிறது. சென்னை சேப்பாக்கத்தில் நேற்று துவங்கிய ‘பி’ பிரிவு லீக் போட்டியில் காலிறுதி வாய்ப்பை இழந்த தமிழக அணி சவுராஷ்டிரா அணியை சந்தித்தது. ‘டாஸ்’ வென்ற தமிழக அணி பேட்டிங் தேர்வு செய்தது.
தமிழக அணிக்கு ஜெகதீசன் (6) ஒற்றை இலக்கில் திரும்பினார். சாய் சுதர்சன் (45), பாபா அபராஜித் (45) அரை சத வாய்ப்பை இழந்தனர். கேப்டன் பிரதோஷ் 19 ரன்களில் அவுட்டானார். பாபா இந்திரஜித், விஜய் சங்கர் பொறுப்புடன் செயல்பட்டனர். முதல் நாள் ஆட்ட நேர முடிவில், தமிழக அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 183 ரன்கள் எடுத்திருந்தது. இந்திரஜித் (45), விஜய் சங்கர் (11) அவுட்டாகாமல் இருந்தனர்.
சவுராஷ்டிரா சார்பில் பந்துவீசிய ரவீந்திர ஜடேஜா நம்பிக்கை தந்தார்.முழங்கால் ஆப்பரேஷன் காரணமாககடந்த ஆறு மாதமாக போட்டிகளில் பங்கேற்காத இவர், ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் (பிப்.9– மார்ச் 13) இடம்பெறுவதற்காக ரஞ்சி கோப்பையில் விளையாடுகிறார். நேற்றைய போட்டியில் 17 ஓவர் வீசிய இவர் விக்கெட் வீழ்த்தவில்லை. 36 ரன்கள் விட்டுத்தந்தார். 2 ஓவர் ‘மெய்டனாக’ வீசினார்.
ஜார்க்கண்ட் ‘164’ஜார்க்கண்ட்டின் ஜாம்ஷெட்பூரில் நடக்கும் ‘சி’ பிரிவு லீக் போட்டியில் கர்நாடகா, ஜார்க்கண்ட் அணிகள் மோதுகின்றன. முதலில் பேட்டிங் செய்த ஜார்க்கண்ட் அணி ‘சுழலில்’ சிக்கியது. கிருஷ்ணப்பா கவுதம் சுழற்பந்துவீச்சில் ஆர்யமான் (6), குமார் (22) உள்ளிட்டோர் சிக்கினர். சுப்ரியோ (14), வினாயக்கை (3) ‘சுழல்’ வீரர் ஸ்ரேயாஸ் வெளியேற்றினார். ஜார்க்கண்ட் அணி முதல் இன்னிங்சில் 164 ரன்களுக்கு சுருண்டது. கவுதம் 4, ஸ்ரேயாஸ் 3 விக்கெட் கைப்பற்றினார். முதல் இன்னிங்சை துவக்கிய கர்நாடகா அணி ஆட்ட நேர முடிவில், 2 விக்கெட்டுக்கு 80 ரன்கள் எடுத்து 84 ரன்கள் பின்தங்கி இருந்தது. தேவ்தத் (20 ), நிகின் (8) அவுட்டாகாமல் இருந்தனர்.
ஜாதவ் சதம்
மும்பையில் நடக்கும் ‘பி’ பிரிவு லீக் போட்டியில் மகாராஷ்டிரா, மும்பை அணிகள் மோதுகின்றன. முதலில் பேட்டிங் செய்த மகாராஷ்டிரா அணிக்கு கேதர் ஜாதவ் (128) சதம் கடந்தார். கேப்டன் பாவ்னே (1) ஏமாற்ற, ஆட்ட நேர முடிவில் மகாராஷ்டிரா முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 314 ரன்கள் எடுத்திருந்தது. சவுரப் நவாலே (56), ஆஷ்லே (32) அவுட்டாகாமல் இருந்தனர்.