இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதல் இரு சவாலில் வென்ற இந்தியா 2–0 என தொடரை கைப்பற்றியது. மூன்றாவது போட்டி நேற்று ம.பி.,யின் இந்துாரில் நடந்தது.
‘டாஸ்’ வென்ற நியூசிலாந்து கேப்டன் டாம் லதாம் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார். இந்திய அணியில் முகமது ஷமி, முகமது சிராஜுக்கு ஓய்வு தரப்பட்டு உம்ரான் மாலிக், சகால் சேர்க்கப்பட்டனர்.
கலக்கல் துவக்கம்
இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா, சுப்மன் கில் வலுவான துவக்கம் தந்தனர். இருவரும் பவுண்டரி, சிக்சர் மழை பொழிய ரன் ‘ஜெட்’ வேகத்தில் உயர்ந்தது. ரோகித் 83வது பந்தில் சதம் எட்டினார். மறுபக்கம் சுப்மன், 72வது பந்தில் சதம் விளாசினார். முதல் விக்கெட்டுக்கு 26 ஓவரில் 212 ரன் (156 பந்து) சேர்த்த போது, ரோகித் (101) வெளியேறினார். சிறிது நேரத்தில் சுப்மன் (112) அவுட்டானார்.
ஏமாற்றிய ‘மிடில்’
பின் ‘மிடில் ஆர்டர்’ வீரர்கள் ஏமாற்றினர். இஷான் கிஷான் (17), கோஹ்லி (36), சூர்யகுமார் (14) நிலைக்கவில்லை. வாஷிங்டன் சுந்தர் (9) வாய்ப்பை வீணடித்தார். கடைசி நேரத்தில் ஹர்திக் பாண்ட்யா, ஷர்துல் தாகூர் (25) விரைவாக ரன் எடுத்தனர். ஹர்திக் பாண்ட்யா (54) அரைசதம் கடந்தார். இந்திய அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 385 ரன் குவித்தது.
கான்வே மிரட்டல்
நியூசிலாந்து அணிக்கு கான்வே, ஆலென் (0) ஜோடி துவக்கம் தந்தது. குல்தீப் சுழலில் நிகோல்ஸ் (42) வீழ்ந்தார். 57 ரன்னில் இஷான் தயவில் ‘ஸ்டம்டு’ ஆகாமல் தப்பிய கான்வே, 72வது பந்தில் சதம் எட்டினார். ஷர்துல் வீசிய 26 வது ஓவரில் நியூசிலாந்தின் மிட்செல் (24), டாம் லதாம் (0) அடுத்தடுத்து அவுட்டாக, திருப்பம் ஏற்பட்டது.
மனம் தளராத கான்வே, வேகமாக ரன் சேர்க்க ‘டென்ஷன்’ எகிறியது. 100 பந்தில் 138 ரன் சேர்த்த இவர், உம்ரான் வீசிய 142 கி.மீ., வேக பந்தில் ரோகித்திடம் ‘கேட்ச்’ கொடுத்தார். ‘அபாய’ வீரர் பிரேஸ்வெல் (26), குல்தீப் சுழலில் சரிய, இந்திய அணியின் வெற்றி உறுதியானது.
பெர்குசன் (7), டபி (0), சான்ட்னர் (34) வெளியேற, நியூசிலாந்து அணி 41.2 ஓவரில் 295 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி தோற்றது.
இந்தியா சார்பில் ஷர்துல் தாகூர், குல்தீப் தலா விக்கெட் வீழ்த்தினர்.
19
இந்துார் போட்டியில் இந்திய வீரர்கள் மொத்தம் 19 சிக்சர் அடித்தனர். ஒருநாள் அரங்கில் ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் அடித்த போட்டி வரிசையில், இது முதலிடத்தை சமன் செய்தது. இதற்கு முன் 2013ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பெங்களூரு போட்டியில் இந்தியா 19 சிக்சர் அடித்து இருந்தது.
21
ஒருநாள் அரங்கில் முதல் 4 சதத்தை குறைந்த இன்னிங்சில் அடித்த இந்திய வீரர் ஆனார் சுப்மன். இவர் 21 இன்னிங்சில் 4 சதம் எட்டினார். இதற்கு முன் ஷிகர் தவான் 24 இன்னிங்சில் 4 சதம் அடித்தார். சர்வதேச அரங்கில் இமாம் (9 இன்னிங்ஸ், பாக்.,), குயின்டன் டி காக் (16, தெ.ஆப்.,), டென்னிஸ் அமிசிற்கு (18, இங்கிலாந்து) அடுத்த இடம் பெற்றார் சுப்மன்.
30
இந்துாரில் 101 ரன் எடுத்த ரோகித், ஒருநாள் அரங்கில் அதிக சதம் அடித்த வீரர்களில் மூன்றாவது இடத்தை பாண்டிங்குடன் (ஆஸி.,) பகிர்ந்து கொண்டார். இருவரும் தலா 30 சதம் அடித்துள்ளனர். முதல் இரு இடத்தில் இந்தியாவின் சச்சின் (49), கோஹ்லி (46) உள்ளனர்.
இதன் விபரம்
வீரர்/அணி இன்னிங்ஸ் சதம்
சச்சின்/இந்தியா 452 49
கோஹ்லி/இந்தியா 261 46
ரோகித்/இந்தியா 234 30
பாண்டிங்/ஆஸி., 365 30
ஜெயசூர்யா/இலங்கை 433 28
83
மூன்றாவது போட்டியில் ரோகித் 83 வது பந்தில் சதம் அடித்தார். இது ஒருநாள் அரங்கில் இவர் அடித்த இரண்டாவது அதிவேக சதமாக அமைந்தது. முன்னதாக 2018ல் இங்கிலாந்துக்கு எதிராக 82 பந்தில் (நாட்டிங்காம்) சதம் விளாசி இருந்தார்.
212
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் அரங்கில் இந்தியாவின் ரோகித்–சுப்மன் இணைந்து முதல் விக்கெட்டுக்கு அதிக ரன் சேர்த்த ஜோடி என சாதனை படைத்தது. இவர்கள் நேற்று 212 ரன் சேர்த்தனர். இதற்கு முன் சேவக்–காம்பிர் ஜோடி (இந்தியா, 2009), ஜெயசூர்யா–தரங்கா (இலங்கை, 2006) தலா 201 ரன் சேர்த்திருந்தது.
300
ஒருநாள் அரங்கில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்த கடைசி 5 இன்னிங்சில் 409/8 (வங்கதேசம்), இலங்கையுடன் 373/7, 390/5, நியூசிலாந்துடன் 349/8, 385/9 ரன் எடுத்தது.
360
இரு அணிகள் மோதிய 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் அதிக ரன் எடுத்த வீரர்கள் வரிசையில் இந்தியாவின் சுப்மன், பாகிஸ்தானின் பாபர் ஆசத்துடன் (2016, எதிர்–வெ.இண்டீஸ்) முதலிடத்தை பகிர்ந்து கொண்டார். இருவரும் தலா 360 ரன் எடுத்தனர். அடுத்த இடத்தில் வங்கதேசத்தின் இம்ருல் கெய்ஸ் (349 ரன், எதிர்–ஜிம்பாப்வே, 2018) உள்ளார்.
1101
ரோகித் 2020ல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பெங்களூரு ஒருநாள் போட்டியில் 119 ரன் எடுத்தார். இதன் பின் 1101 நாளில் ஒருநாள் அரங்கில் நேற்று சதம் அடித்தார். தவிர சர்வதேச அரங்கில் 2021, செப். 2க்கு பின் (ஓவல் டெஸ்ட், 127 ரன்) 507 வது நாளில் நேற்று சதம் எட்டினார் ரோகித்.