மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதிக்கு செர்பியாவின் ஜோகோவிச், பெலாரசின் சபலென்கா முன்னேறினர்.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் ‘ஆஸ்திரேலிய ஓபன்’ கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்றில் ‘நம்பர்–5’ வீரர் செர்பியாவின் ஜோகோவிச், 24வது இடத்திலுள்ள ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாருவை சந்தித்தார். முதல் செட்டை 6–2 என வசப்படுத்திய ஜோகோவிச், அடுத்த இரு செட்டை 6–1, 6–2 என எளிதாக கைப்பற்றினார்.
முடிவில் ஜோகோவிச் 6–2, 6–1, 6–2 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு நான்காவது சுற்றில் ரஷ்யாவின் ரூபலெவ், டென்மார்க்கின் ஹோல்கர் மோதினர். மூன்று மணி நேரம், 39 நிமிடம் நடந்த இப்போட்டியில் ரூபலெவ் 6–3, 3–6, 6–3, 4–6, 7–6 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
சபலென்கா அபாரம்
பெண்கள் ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்றில் பெலாரசின் சபலென்கா, சுவிட்சர்லாந்தின் பென்சிக்கை சந்தித்தார். முதல் செட்டை சபலென்கா 7–5 என கைப்பற்றினார். அடுத்த செட்டை 6–2 என எளிதாக வென்றார். முடிவில் சபலென்கா 7–5, 6–2 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார்.
மற்றொரு போட்டியில் செக் குடியரசின் கரோலினா பிலிஸ்கோவா 6–0, 6–4 என ஷுவாய் ஜங்கை வென்று காலிறுதிக்கு முன்னேறினார். பிற போட்டிகளில் போலந்தின் லின்னெட்டே, குரோஷியாவின் வெகிச் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தனர்.
சானியா–போபண்ணா கலக்கல்
கலப்பு இரட்டையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் சானியா மிர்சா, போபண்ணா ஜோடி, ஜப்பானின் நினோமியா, உருகுவேயின் ஏரியல் ஜோடியை சந்தித்தது. இதில் இந்திய ஜோடி 6–4, 7–6 என்ற நேர் செட்கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறியது.