புவனேஸ்வர்: உலக கோப்பை ஹாக்கி ‘கிராஸ் ஓவர்’ போட்டியில் ஸ்பெயின் அணி ‘பெனால்டி ஷூட் அவுட்’ முறையில் மலேசியாவை 4–3 என வீழ்த்தி, காலிறுதிக்கு முன்னேறியது.
ஒடிசாவில் உலக கோப்பை ஹாக்கி தொடர் நடக்கிறது. புவனேஸ்வரில் நடந்த ‘கிராஸ் ஓவர்’ போட்டியில் ஸ்பெயின் அணி மலேசியாவை சந்தித்தது. இப்போட்டி பரபரப்பாக இருந்தது. மலேசிய வீரர்கள் மின்னல் வேகத்தில் ஆடினர். மறுபக்கம் ஸ்பெயின் அணியும் மிரட்டியது. இருப்பினும் ஸ்பெயின் 8 ‘பெனால்டி கார்னர்’ வாய்ப்புகளை வீணடித்தது. மலேசியாவோ கிடைத்த ஒரு ‘பெனால்டி கார்னர்’ வாய்ப்பை பயன்படுத்த தவறியது.
இரு அணிகளும் விட்டுக் கொடுக்காமல் போராட, நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் போட்டி 2–2 என சமநிலையை எட்டியது. இதையடுத்து வெற்றியாளரை முடிவு செய்ய ‘பெனால்டி ஷூட் அவுட்’ முறைக்கு ஆட்டம் சென்றது. இரு அணிகளுக்கும் தலா 5 வாய்ப்புகள் வழங்கப்பட்டன. இதிலும் இரு அணி வீரர்களும் அசராமல் போராட, 3–3 என சமநிலை ஏற்பட்டது. அடுத்து, ‘சடன் டெத்’ முறைக்கு சென்றது. இதில் ஸ்பெயின் அணியின் மார்க் மிராலஸ் கலக்கலாக கோல் அடித்தார். மலேசியாவின் பிர்ஹான் அஷாரி ‘மிஸ்’ செய்தார். மலேசிய வாய்ப்புகளை அருமையாக தடுத்த ஸ்பெயின் கோல்கீப்பர் மரியோ காரின் ‘ஹீரோ’வாக ஜொலித்தார். இறுதியில் ஸ்பெயின் அணி 4–3 என்ற கோல் கணக்கில் வென்று, காலிறுதிக்கு முன்னேறியது. காலிறுதியில் ஆஸ்திரேலியாவை சந்திக்க உள்ளது.