மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் நான்காவது சுற்றில் ‘நம்பர்–1’ வீராங்கனை ஸ்வியாடெக் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
மெல்போர்னில் ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்றில் போலந்தின் இகா ஸ்வியாடெக், 25வது இடத்திலுள்ள எலினா ரிபாகினாவை சந்தித்தார். 21 வயதான ஸ்வியாடெக் எளிதில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கு மாறாக, முதல் செட்டை 4–6 என பறிகொடுத்தார். அடுத்த செட்டிலும் ஏமாற்றிய இவர் 4–6 என இழந்தார். ஒரு மணி நேரம் 29 நிமிடம் நடந்த போட்டியில் ஸ்வியாடெக் 4–6, 4–6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்தார்.
முதல் முறை
கடந்த 2020ல் பிரெஞ்ச் ஓபனில் கோப்பை வென்ற ஸ்வியாடெக்கிற்கு 2022, பொற்காலமாக அமைந்தது. இதில் பிரெஞ்ச் ஓபன், யு.எஸ்., ஓபன் என இரண்டு கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை தனதாக்கினார். கடந்த முறை ஆஸ்திரேலிய ஓபனில் அரையிறுதி வரை முன்னேறி இருந்தார். இதுவரை 11 தொடர்களில் கோப்பை கைப்பற்றியுள்ளார். கடந்த ஆண்டு ஏப்ரலில் பெண்களுக்கான உலக டென்னிஸ் தரவரிசையில் முதல் முறையாக ‘நம்பர்–1’ இடத்தை பிடித்தார்.
ஆஸ்திரேலிய ஓபனில், முதலிரண்டு இடங்களில் உள்ள வீரர்களான ஸ்பெயினில் நடால், நார்வேயின் காஸ்பர், இரண்டாவது இடத்திலுள்ள துனிசியா வீராங்கனை ஜாபியர் இரண்டாம் சுற்றில் தோல்வியடைந்தனர். தற்போது இப்பட்டியலில் ‘நம்பர்–1’ வீராங்கனை ஸ்வியாடெக்கும் இணைந்துள்ளார். இதன் மூலம், டென்னிஸ் அரங்கில் ‘ஓபன் எரா’ துவங்கிய 55 ஆண்டு வரலாற்றில், முதலிரண்டு இடங்களில் உள்ள நட்சத்திரங்கள் காலிறுதிக்கு முன்பு வெளியேறியது முதல் முறையாக அரங்கேறி உள்ளது.
மற்றொரு 4வது சுற்றில் ‘நம்பர்–7’ வீராங்கனையான அமெரிக்காவின் கோகோ காப் 5–7, 3–6 என்ற கணக்கில் லாட்வியாவின் ஆஸ்டபென்கோவாவிடம் தோல்வியடைந்தார். பெண்கள் ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்றில் பெலாரசின் அசரன்கா 4–6, 6–1, 6–4 என சீனாவின் லின் சூவை தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறினார்.
ஸ்டெபானஸ் வெற்றி
ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் ‘நம்பர்–4’ வீரரான கிரீசின் ஸ்டெபானஸ், இத்தாலியின் ஜானக் சின்னரை எதிர் கொண்டார். அபாரமாக விளையாடிய ஸ்டெபானஸ் 6–4, 6–4, 3–6, 4–6, 6–3 என வென்று காலிறுதிக்கு முன்னேறினர்.
மற்ற போட்டிகளில் அமெரிக்காவின் செபாஸ்டியன் கோர்டா, செக் குடியரசின் லெகாகா, ஜப்பானின் நிஷியகா வெற்றி பெற்றனர்.
சானியா தோல்விபெண்கள் இரட்டையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் சானியா, கஜகஸ்தானின் அன்னா ஜோடி 4–6, 6–4, 2–6 என உக்ரைனின் கலினினா, அலிசன் வான் ஜோடியிடம் வீழ்ந்தது. அடுத்த மாதத்துடன் டென்னிஸ் அரங்கிலிருந்து ஓய்வு பெறவுள்ள சானியா பங்கேற்ற கடைசி கிராண்ட்ஸ்லாம் தொடர் இது. இதன் கலப்பு இரட்டையரில் 2ம் சுற்றில் போபண்ணாவுடன் விளையாடி வருகிறார்.
தந்தை வழியில்
நான்காவது சுற்றில் வென்ற அமெரிக்க வீரர் செபாஸ்டியன் கோர்டா, கிராண்ட்ஸ்லாம் அரங்கில் முதல் முறையாக காலிறுதிக்கு முன்னேறினார். இவரது தந்தையான பெட்ரா கோடாவும், 54, டென்னிஸ் வீரர். இவர் 1998ல் ஆஸ்திரேலிய ஓபனில் கோப்பை வென்றவர்.