அயோத்தி: இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் அவசர செயற்குழு கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பு (டபிள்யு.எப்.ஐ.,) தலைவரான பா.ஜ., எம்.பி., பிரிஜ் பூஷன் சரண் சிங், வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு தருவதாக புகார் கிளம்பியது. இவர் பதவி விலக வலியுறுத்தி டில்லியின் ஜந்தர் மந்தரில் வினேஷ் போகத், சாக்சி, பஜ்ரங் புனியா போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி விசாரிக்க, 7 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டது.
தன் பங்கிற்கு, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் கண்காணிப்பு குழுவை ஏற்படுத்தியது. விசாரணை முடியும் வரை, பிரிஜ் பூஷன் பதவியில் இருந்து விலகி இருக்கவும் உத்தரவிட்டது. இதனையடுத்து, போராட்டம் முடிவுக்கு வந்தது.
நேற்று, உ.பி.,யின் அயோத்தியில் டபிள்யு.எப்.ஐ.,யின் அவசரநிலை செயற்குழு கூட்டம் நடக்க இருந்தது. இதில் பிரிஜ் பூஷன் கலந்து கொண்டு தன் மீதான புகாருக்கு மறுப்பு தெரிவிப்பார் கூறப்பட்டது.
இதை தெரிந்து கொண்ட மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம், ‘இந்திய மல்யுத்த கூட்டமைப்பு மற்றும் அதன் தலைவர் அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு தடை விதிக்கப்படுகிறது,’ என, தெரிவித்தது. இதனால், செயற்குழு கூட்டம் ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.