சென்னை: சென்னை, மோகன் பகான் அணிகள் மோதிய ஐ.எஸ்.எல்., கால்பந்து போட்டி கோல் எதுவுமின்றி ‘டிரா’ ஆனது.
இந்தியாவில் இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து தொடர் நடக்கிறது. சென்னையில் நடந்த லீக் போட்டியில் மோகன் பகான், சென்னை அணிகள் மோதின.போட்டியின் 30வது நிமிடத்தில் மோகன் பகான் அணிக்கு ‘பிரீ கிக்’ வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை பிரண்டன் வீணடித்தார். 35வது நிமிடத்தில் சென்னை வீரர் ஜூலியஸ் அடித்த பந்து கோல்போஸ்ட் மேலே சென்றது. முதல் பாதியில் இரு அணியினரும் மாறி மாறி முரட்டு ஆட்டத்தில் இறங்கினர். இதனால் மூன்று வீரர்கள் ‘எல்லோ கார்டு’ பெற்றனர்.
85வது நிமிடத்தில் துடிப்பாக செயல்பட்ட, சென்னையின் வின்சி பந்தை கோல்போஸ்ட் நோக்கி உதைத்தார். ஆனால், எதிரணி கோல்கீப்பர் விஷால் அந்தரத்தில் பறந்து பந்தை மேலே தள்ளிவிட்டார். சென்னை ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். முடிவில் போட்டி கோல் எதுவுமின்றி ‘டிரா’ ஆனது. இதுவரை சென்னை அணி 14 லீக் போட்டிகளில் 4 வெற்றி, 5 தோல்வி, 5 ‘டிரா’ என மொத்தம் 17 புள்ளியுடன் 8வது இடத்தில் நீடிக்கிறது.