மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் நான்காவது சுற்றுக்கு செர்பியாவின் நோவக் ஜோகோவிச், பெலாரசின் சபலென்கா முன்னேறினர்.
ஆஸ்திரேலியாவில் நடப்பு ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் மெல்போர்னில் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்றில் ‘நம்பர்–5’ வீரரான செர்பியாவின் ஜோகோவிச், பல்கேரியாவின் டிமிட்ரோவை எதிர் கொண்டார். ‘டை பிரேக்கர்’ வரை சென்ற முதல் செட்டை 7–6 என வசப்படுத்திய ஜோகோவிச், அடுத்த செட்டையும் 6–3 என தனதாக்கினார். மூன்றாவது செட்டிலும் ஆதிக்கம் செலுத்திய இவர் 6–4 என கைப்பற்றினார். மூன்று மணி நேரம் 7 நிமிடம் நீடித்த போட்டியின் முடிவில், ஜோகோவிச் 7–6,6–3, 6–4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று நான்காவது சுற்றுக்குள் நுழைந்தார்.
முர்ரே தோல்வி
மற்றொரு மூன்றாவது சுற்றில் 66வது இடத்திலுள்ள ஆன்டி முர்ரே, ஸ்பெயினின் ராபர்டோ படிஸ்டாவை (‘நம்பர்–25’) எதிர் கொண்டார். முந்தைய சுற்றில் (5 மணி நேரம் 45 நிமிடம்) ‘மாரத்தான்’ ஆட்டம் போல ஆடிய முர்ரே இம்முறை சறுக்கினார். முதல் செட்டை 1–6 என இழந்த முர்ரே, அடுத்த செட்டை 7–6 என தனதாக்கினார். கடைசி இரண்டு செட்டையும் 3–6, 4–6 என பறிகொடுத்தார். முடிவில், முர்ரே 1–6, 7–6, 3–6, 4–6 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார்.
மற்ற போட்டிகளில் ரஷ்யாவின் ரூபலெவ், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார், டென்மார்க்கின் ஹோல்கர் ரூனே உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.
பெண்கள் ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்றில் ‘நம்பர்–5’ வீராங்கனையான பெலாரசின் சபலென்கா, தரவரிசையில் 32வது இடத்திலுள்ள பெல்ஜியத்தின் எலிசா மெர்டன்சை சந்தித்தார். துவக்கம் முதலே அசத்திய சபலென்கா 6–2, 6–3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
மற்ற மூன்றாவது சுற்றில் கரோலினா கார்சியா (பிரான்ஸ்), பிலிஸ்கோவா (செக் குடியரசு), பெலின்டா பென்சிக் (சுவிட்சர்லாந்து) வெற்றி பெற்றனர்.
ஜீவன் ஜோடி வெற்றிஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ஜீவன், பாலாஜி ஜோடி, போஸ்னியாவின் இவான் டோடிச், அமெரிக்காவின் ஆஸ்டின் ஜோடியை எதிர் கொண்டது. இதில் துடிப்பாக செயல்பட்ட ஜீவன், பாலாஜி ஜோடி 7–6, 2–6, 6–4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது.
சானியா ஜோடி அசத்தல்
கலப்பு இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சானியா–போபண்ணா ஜோடி, ஆஸ்திரேலியாவின் ஜெமியா–சவேல்லா ஜோடியை சந்தித்தது. இதில் அசத்திய இந்திய ஜோடி 7–5, 6–3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றது.
வாழைப்பழம் கிடைக்குமா...
டென்னிஸ் நட்சத்திரங்கள் விளையாடும் போது கிடைக்கும் ‘கேப்பில்’ உடனடி ‘எனர்ஜிக்காக’ வாழைப்பழம் சாப்பிடுவர். நேற்று ரஷ்ய வீரர் ரூபலேவ் தனக்கு தரப்பட்ட பழங்களை விரைவில் சாப்பிட்டு முடித்துவிட்டார். எதிர்த்து விளையாடிய இங்கிலாந்தின் ஈவன்ஸ், தன்னிடம் இருந்த பழத்தை, ரூபலேவிடம் துாக்கி எறிய கச்சிதமாக பிடித்துக்கொண்டார். இது குறித்து அவர் கூறுகையில்,‘‘ வாழைப்பழம் கூடுதலாக இருக்கிறதா என தொடர் நடத்தும் அதிகாரிகளிடம் கேட்டதற்கு, இல்லை என்றனர். நல்லவேளையாக ஈவன்ஸ் தந்து உதவினார். இவரால் ‘எனர்ஜியாக’ விளையாடினேன்,’’ என்றார்.