மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் ஆன்டி முர்ரே விளையாடிய போட்டி சுமார் ஆறு மணி நேரம் நீடித்தது. இதில் வென்ற முர்ரே, மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் தரவரிசையில் 66 வது இடத்திலுள்ள பிரிட்டனின் ஆன்டி முர்ரே, 159வது இடத்திலுள்ள தானாசி கோக்கினாகிஸ் மோதினர்.
முதல் செட்டை 4–6 என இழந்த முர்ரே, ‘டை பிரேக்கர்’ வரை சென்ற அடுத்த செட்டையும் 6–7 என நழுவவிட்டார். பின் சுதாரித்துக் கொண்ட இவர் மூன்றாவது செட்டில் சவால் கொடுத்தார். கடைசியில் ‘டை பிரேக்கர்’ வரை சென்று 7–6 என வசப்படுத்தினார்.
நான்காவது செட்டை 6–3 என எளிதாக கைப்பற்றினார். இருவரும் தலா 2 செட் கைப்பற்ற, வெற்றியாளரை முடிவு செய்ய போட்டி ஐந்தாவது செட்டுக்கு சென்றது. இது 5–5 என இழுபறியாக இருந்தது. பின் அடுத்தடுத்த ‘கேம்களை’ கைப்பற்றிய முர்ரே 7–5 என செட்டை தன்வசப்படுத்தினார். ஐந்து மணி நேரம், 45 நிமிடம் நடந்த போராட்டத்தின் முடிவில் முர்ரே 6–6, 6–7, 7–6, 6–3, 7–5 என வெற்றி பெற்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் கிரீசின் ஸ்டெபானஸ் டிசிட்சிபாஸ், நெதர்லாந்தின் டாலனை 6–2, 7–6, 6–3 என வென்றார்.
‘அவசரத்திற்கு’ மறுப்பு
முர்ரே, தானாசி மோதிய ‘மாரத்தான்’ ஆட்டத்தின் முதல் செட் மட்டும் 52 நிமிடம் நடந்த. அடுத்த மூன்று செட் 1:14, 1:22, 1:10 மணி நேரம் என தலா ஒரு மணி நேரம் நீடித்தன. நான்கு செட் முடிய 4 மணி நேரம், 43 நிமிடம் ஆனது. ஆஸ்திரேலிய நேரப்படி அதிகாலை 3:00 மணி ஆகிவிட்டது.
இதற்குள் மைதானத்தை விட்டு வெளியேறி இரு முறை ‘பாத்ரூம்’ சென்றார். கடைசி, 5வது செட்டும் ஒரு மணி நேரத்துக்கும் மேல் நீடிக்கலாம் என்பதால், மூன்றாவது முறையாக ‘பாத்ரூம்’ செல்ல அனுமதி கேட்டார் முர்ரே. விதிப்படி ‘அனுமதி இல்லை’ என அம்பயர் மறுத்தார்.
கடைசியில் ஐந்தாவது செட்டும் (1:07 மணி நேரம்) நீடிக்க, அதிகாலை 4:10 மணிக்குத் தான் முடிந்தது. இதற்கு முன் 2008ல் ஹெவிட், பாக்தாதிஸ் மோதிய போட்டி 4:34 மணிக்கு முடிந்து இருந்தது.
முர்ரே கூறுகையில்,‘‘ இரவு போட்டிகளை தாமதமாகத் துவங்கும் போது இது போன்ற சூழல்கள் ஏற்படத் தான் செய்யும். சிறுநீர் கழிக்க கூட அனுமதிக்காதது கேலிக்கூத்தாக உள்ளது,’’ என்றார்.
5 மணி நேரம், 45 நிமிடம்
ஆஸ்திரேலிய ஓபனில் நீண்ட நேரம் நீடித்த போட்டியாக, 2012ல் ஜோகோவிச், நடால் மோதிய பைனல் அமைந்தது. 5 மணி நேரம், 53 நிமிடம் நடந்த இப்போட்டியில் ஜோகோவிச் வென்றார். தவிர ஒட்டுமொத்த கிராண்ட்ஸ்லாம் பைனல் வரலாற்றிலும் நீண்ட நேரம் நடந்த போட்டி ஆனது இது.
* ஆஸ்திரேலிய ஓபனில் நீண்ட நேரம் நடந்த போட்டி வரிசையில் முர்ரே–தானாசி ஆட்டம் ( 5 மணி நேரம், 45 நிமிடம்) இரண்டாவது இடம் பெற்றது.
* ஒட்டுமொத்த டென்னிஸ் அரங்கில் அமெரிக்காவின் ஜான் இஸ்னர், பிரான்சின் நிகோலஸ் மகுத் இடையிலான ஆட்டம் அதிக நேரம் நடந்த போட்டியானது. 2010ல் விம்பிள்டன் டென்னிஸ் முதல் சுற்றானது 11 மணி நேரம், 5 நிமிடம் (மூன்று நாள்) நடந்தது.
ஸ்வியாடெக் வெற்றி
பெண்கள் ஒற்றையர் மூன்றாவது சுற்றில் உலகின் ‘நம்பர்–1’ போலந்தின் இகா ஸ்வியாடெக், ஸ்பெயினின் கிறிஸ்டினா பக்சா மோதினர். இதில் ஸ்வியாடெக் 6–0, 6–1 என எளிதாக வென்றார். அமெரிக்காவின் கோகோ காப் 6–3, 6–2 என சக வீராங்கனை பெராவை தோற்கடித்தார்.
மற்ற 3வது சுற்றில் பெலாரசின் அசரன்கா, அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, செக்குடியரசின் கிரெஜ்ஜிகோவா, கஜகஸ்தானின் ரிபாகினா, லாட்வியாவின் ஆஸ்டபென்கா வெற்றி பெற்றனர்.
போபண்ணா ஜோடி தோல்வி
ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மாத்யூ எப்டென் ஜோடி 3–6, 5–7 என்ற நேர் செட் கணக்கில் ஆஸ்திரியாவின் அலெக்சாண்டர் எர்லர், லுாகாஸ் மீட்லர் ஜோடியிடம் தோல்வியடைந்தது.