ரியாத்: ரொனால்டோ அணிக்கு எதிரான நட்பு கால்பந்து போட்டியில் மெஸ்சியின் பி.எஸ்.ஜி., அணி 5–4 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 37. சமீபத்தில் ரூ. 1740 கோடிக்கு சவுதி அரேபியாவின் அல் நாசர் கிளப் அணியில் இணைந்தார். முதன் முறையாக அல் நாசர், அல் ஹிலால் வீரர்கள் இணைந்த ‘ ரியாத் ஆல் ஸ்டார் லெவன்’ அணிக்காக களமிறங்கினார். இதில் பாரிஸ் ஜெயன்ட் ஜெர்மைன் (பி.எஸ்.ஜி.,) அணிக்கு எதிரான நட்பு போட்டியில் பங்கேற்றார்.
பி.எஸ்.ஜி., அணியில் அர்ஜென்டினா அணிக்கு உலக கோப்பை வென்று தந்த மெஸ்சி, பைனலில் 4 கோல் அடித்து மிரட்டிய பிரான்சின் எம்பாப்வே, பிரேசிலின் நெய்மர் என மூவரும் தாக்குதல் வீரர்களாக களமிறங்கினர். உலகளவில் முன்னணி வீரர்கள் பங்கேற்றதால் போட்டி மீதான எதிர்பார்ப்பு எகிறியது.
போட்டி துவங்கிய 3வது நிமிடத்தில் நெய்மர் கொடுத்த ‘பாசை’ பெற்ற மெஸ்சி, பி.எஸ்.ஜி., அணிக்காக முதல் கோல் அடித்தார். 34வது நிமிடம் ரியாத் அணிக்கு கிடைத்த ‘பெனால்டி’ வாய்ப்பை கோலாக மாற்றினார் ரொனால்டோ. 43வது நிமிடம் எம்பாப்வேயிடம் இருந்து பந்தை பெற்ற மார்குயினோஸ் கோல் அடித்து அசத்தினார்.
முதல் பாதியின் ‘ஸ்டாப்பேஜ்’ நேரத்தில் மீண்டும் அசத்திய ரொனால்டோ (45+6 வது நிமிடம்), ரியாத் அணிக்காக இரண்டாவது கோல் அடிக்க, முதல் பாதி 2–2 என சமனில் முடிந்தது.
இரண்டாவது பாதியில் 53வது நிமிடம் பி.எஸ்.ஜி., வீரர் செர்ஜி ராமோஸ் ஒரு கோல் அடித்தார். 56 வது நிமிடம் ரியாத் வீரர் ஜங் ஹியுன் ஒரு கோல் அடித்தார். ஸ்கோர் 3–3 என ஆனது. 60வது நிமிடம் கிடைத்த ‘பெனால்டி’ வாய்ப்பில் பி.எஸ்.ஜி., வீரர் எம்பாப்வே ஒரு கோல் அடித்தார்.
தொடர்ந்து அசத்திய இந்த அணியின் ஹியுகோ (78வது) ஒரு கோல் அடித்தார். போட்டியின் கடைசி நிமிடத்தில் ரியாத் வீரர் டாலிஸ்கா (90+4வது) தன் பங்கிற்கு கோல் அடித்து ஆறுதல் தந்தார். முடிவில் மெஸ்சியின் பி.எஸ்.ஜி., அணி 5–4 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
ஒரு டிக்கெட் ரூ. 22 கோடி
ரியாத்–பி.எஸ்.ஜி., மோதிய போட்டியில் தொண்டு நிறுவனத்துக்கு நிதி சேர்க்கும் வகையில் ‘ஸ்பெஷல்’ டிக்கெட் ஒன்று ஏலம் விடப்பட்டது. இதை சவுதி அரேபிய ‘ரியல் எஸ்டேட்’ தொழிலதிபர் அல் ஷேக் ரூ. 22 கோடிக்கு வாங்கினார். இவருக்கு வீரர்களின் ‘லாக்கர்’ அறைக்கு சென்று, அவர்களுடன் போட்டோ எடுக்க அனுமதி தரப்பட்டது.