மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றுக்கு செர்பியாவின் ஜோகோவிச் முன்னேறினார்.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில், ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் உலகின் ‘நம்பர்–5’ செர்பியாவின் நோவக் ஜோகோவிச், பிரான்சின் என்சோ குவாக்காட் மோதினர். முதல் செட்டை 6–1 என மிகச் சுலபமாக கைப்பற்றிய ஜோகோவிச், ‘டை பிரேக்கர்’ வரை சென்ற இரண்டாவது செட்டை 6–7 என போராடி இழந்தார். பின் மூன்றாவது செட்டில் எழுச்சி கண்ட இவர், 6–2 என தன்வசப்படுத்தி பதிலடி கொடுத்தார். தொடர்ந்து அசத்திய ஜோகோவிச் 4வது செட்டை 6–0 என வென்றார். மூன்று மணி நேரம், 4 நிமிடம் நீடித்த போட்டியில் ஜோகோவிச் 6–1, 6–7, 6–2, 6–0 என்ற கணக்கில் வெற்றி பெற்று மூன்றாவது சுற்றுக்குள் நுழைந்தார்.
மற்றொரு 2வது சுற்றுப் போட்டியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 7–6, 4–6, 3–6, 2–6 என்ற கணக்கில் அமெரிக்காவின் மைக்கேல் மோவிடம் தோல்வியடைந்து வெளியேறினார். ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் 7–6, 4–6, 6–4, 6–1 என, பிரான்சின் அட்ரியன் மன்னாரினோவை தோற்கடித்து 3வது சுற்றுக்கு முன்னேறினார்.
சபாஷ் சபலென்கா: பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் பெலாரசின் அரினா சபலென்கா 6–3, 6–1 என அமெரிக்காவின் ஷெல்பி ரோஜர்சை வீழ்த்தினார். பிரான்சின் கரோலின் கார்சியா 7–6, 7–5 என கனடாவின் லேலா பெர்னாண்டசை தோற்கடித்தார். சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்சிக் 7–6, 6–3 என அமெரிக்காவின் கிளாரி லியுவை வென்றார்.
மற்ற 2வது சுற்றுப் போட்டிகளில் செக்குடியரசின் கரோலின் பிலிஸ்கோவா, பெல்ஜியத்தின் எலிஸ் மெர்டென்ஸ் உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.
பாம்ப்ரி ஜோடி தோல்வி
ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி, சாகேத் மைனேனி ஜோடி 6–7, 7–6, 3–6 என ஜெர்மனியின் மீஸ், ஆஸ்திரேலியாவின் ஜான் பீர்ஸ் ஜோடியிடம் போராடி தோல்வியடைந்தது. மற்றொரு போட்டியில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், மெக்சிகோவின் மிகுயல் ஜோடி 6–3, 5–7, 3–6 என கிரீசின் பெட்ராஸ், ஸ்டெபானஸ் டிசிட்சிபாஸ் ஜோடியிடம் வீழ்ந்தது.
சானியா ஜோடி வெற்றி
பெண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சானியா மிர்சா, கஜகஸ்தானின் அனா டானிலினா ஜோடி 6–2, 7–5 என ஹங்கேரியின் டால்மா கால்பி, குரோஷியாவின் பெர்னார்டா பெரா ஜோடியை வீழ்த்தியது.