சென்னை: ரஞ்சி கோப்பை லீக் போட்டியில் பிரதோஷ், விஜய் சங்கர் சதம் அடிக்க தமிழக அணி முதல் இன்னிங்சில் 540 ரன்கள் குவித்தது.
இந்தியாவில் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் 88வது சீசன் நடக்கிறது. சென்னையில் நடக்கும் ‘பி’ பிரிவு லீக் போட்டியில் தமிழகம், அசாம் அணிகள் மோதுகின்றன. முதல் நாள் ஆட்ட முடிவில், தமிழக அணி முதல் இன்னிங்சில் 386/4 ரன்கள் எடுத்திருந்தது. பிரதோஷ் (99), விஜய் சங்கர் (53) அவுட்டாகாமல் இருந்தனர்.
இரண்டாம் நாள் ஆட்டம் நடந்தது. பிரதோஷ், விஜய் சங்கர் சதம் கடந்தனர். பிரதோஷ் 153 ரன் எடுக்க, விஜய் சங்கர் 112 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் ஏமாற்ற, தமிழக அணி முதல் இன்னிங்சில் 540 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அசாமின் ரியான் பராக் 4 விக்கெட் கைப்பற்றினார்.
பின் அசாம் அணி துவக்கத்திலேயே திணறியது. சுபம் மண்டல் (13), ஹசரங்கா (4) சொதப்பினர். ரியான் பாரக் (48) கைகொடுத்தார். ஆட்ட முடிவில் அசாம் அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 120 ரன்கள் எடுத்து, 420 ரன்கள் பின்தங்கி இருந்தது. கேப்டன் கோகுல் சர்மா (18), அபிஷேக் (17) அவுட்டாகாமல் இருந்தனர்.
வெற்றியை நோக்கி குஜராத்
நாக்பூரில் நடக்கும் ‘டி’ பிரிவு லீக் போட்டியில் விதர்பா, குஜராத் அணிகள் மோதுகின்றன. விதர்பா முதல் இன்னிங்சில் 74 ரன்கள் எடுத்தது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில், குஜராத் முதல் இன்னிங்சில் 188/5 ரன்கள் எடுத்தது. இரண்டாம் நாள் ஆட்டத்தில், குஜராத் முதல் இன்னிங்சில் 256 ரன்கள் எடுத்தது. விதர்பா அணி 2வது இன்னிங்சில் 254 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 73 ரன்கள் வெற்றி இலக்குடன் 2வது இன்னிங்சை துவக்கிய குஜராத் அணி ஆட்ட நேர முடிவில் 6/1 ரன்கள் எடுத்திருந்தது.