மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் ஸ்பெயினின் நடால் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில், ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் உலகின் ‘நம்பர்–2’ ஸ்பெயினின் ரபெல் நடால், 65வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் மெக்கன்சி மெக்டொனால்டு 27, மோதினர். ‘நடப்பு சாம்பியன்’ அந்தஸ்துடன் களமிறங்கிய நடால் 36, துவக்கத்தில் இருந்தே தடுமாறினார். தவிர இவருக்கு இடுப்பு பகுதி காயம் தொல்லை தர போட்டிக்கு இடையே சிகிச்சை எடுத்துக் கொண்டார்.
இரண்டு மணி நேரம், 32 நிமிடம் நீடித்த போட்டியில் ஏமாற்றிய நடால் 4–6, 4–6, 5–7 என்ற கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார்.
மற்ற 2வது சுற்றுப் போட்டிகளில் கிரீசின் ஸ்டெபானஸ் டிசிட்சிபாஸ், ரஷ்யாவின் டேனில் மெட்வெடேவ், கச்சானோவ், கனடாவின் டெனிஸ் ஷபோவலோவ் உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.
ஸ்வியாடெக் வெற்றி: பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் உலகின் ‘நம்பர்–1’ போலந்தின் இகா ஸ்வியாடெக், கொலம்பியாவின் கமிலா ஒசோரியோ மோதினர். அபாரமாக ஆடிய ஸ்வியாடெக் 6–2, 6–3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் கோகோ காப் 6–3, 7–6 என பிரிட்டனின் எம்மா ரடுகானுவை தோற்கடித்தார். மற்ற 2வது சுற்றுப் போட்டிகளில் அமெரிக்காவின் மடிசன் கீஸ், ஜெசிகா பெகுலா, கிரீசின் மரியா சக்காரி, பெலாரசின் விக்டோரியா அசரன்கா, செக்குடியரசின் பார்போரா கிரெஜ்சிகோவா, லாட்வியாவின் ஜெலினா ஆஸ்டபென்கோ, கஜகஸ்தானின் எலினா ரிபாகினா உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.
செக்குடியரசின் பெட்ரா கிவிட்டோவா, கனடாவின் பியான்கா அதிர்ச்சி தோல்வியடைந்தனர்.
ராசியில்லாத புத்தாண்டு
புத்தாண்டு நடாலுக்கு ராசியில்லாமல் போனது. சிட்னியில் நடந்த யுனைடெட் கோப்பையின் இரண்டு லீக் போட்டியிலும் தோல்வியை தழுவிய நடால், ஆஸ்திரேலிய ஓபன் முதல் சுற்றில் பிரிட்டன் வீரர் ஜாக் டிராபருக்கு எதிராக போராடி வெற்றி பெற்றார். இரண்டாவது சுற்றில் தோற்றதன்மூலம் 23வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்லும் நடாலின் கனவு தகர்ந்தது.