சென்னை: ரஞ்சி கோப்பை லீக் போட்டியில் ஜெகதீசன் சதம் கடந்தார். இந்திரஜித், பிரதோஷ் உள்ளிட்டோர் அரை சதம் அடிக்க, தமிழக அணி முதல் இன்னிங்சில் 300 ரன்களை கடந்தது.
இந்தியாவில் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் 88வது ‘சீசன்’ நடக்கிறது. சென்னையில் நேற்று துவங்கிய ‘பி’ பிரிவு லீக் போட்டியில் தமிழகம், அசாம் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற தமிழக அணி, ‘பேட்டிங்’ தேர்வு செய்தது. தமிழக அணியின் சாய் சுதர்சன் இரண்டு ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி தந்தார். பாபா அபராஜித் (23) விரைவில் திரும்பினார். ஜெகதீசன், கேப்டன் இந்திரஜித் சிறப்பாக விளையாடினர். ஜெகதீசன் (125) சதம் கடந்தார். இந்திரஜித் தன்பங்கிற்கு (77) அரை சதம் எட்டினார். பிரதோஷ், ‘ஆல் ரவுண்டர்’ விஜய் சங்கரும் நம்பிக்கை அளிக்க, பவுலர்கள் விரக்தி அடைந்தனர். இருவரும் அரை சதம் கடந்தனர். ஆட்ட நேர முடிவில், தமிழக அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 386 ரன்கள் எடுத்திருந்தது. பிரதோஷ் (99), விஜய் சங்கர் (53) அவுட்டாகாமல் இருந்தனர். அசாம் சார்பில் சித்தார்த் அதிகபட்சமாக 2 விக்கெட் கைப்பற்றினார்.
சர்பராஸ் அபாரம்
டில்லியில் நடக்கும் மற்றொரு ‘பி’ பிரிவு லீக் போட்டியில் மும்பை, டில்லி அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணியின் பிரித்வி ஷா (40) அரை சத வாய்ப்பை இழந்தார். கேப்டன் ரகானே (2) ஏமாற்றினார். 25 வயதான சர்பராஸ் கான் (125) சதம் கடந்தார். இந்திய டெஸ்ட் அணியில் புறக்கணிக்கப்படும் இவர், நடப்பு ரஞ்சி கோப்பை தொடரில் அடிக்கும் மூன்றாவது சதம். ஆட்ட நேர முடிவில், முதல் இன்னிங்சில் மும்பை அணி 293 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.