மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் இரண்டாவது சுற்றுக்கு ஜோகோவிச், சபலென்கா, கரோலின் கார்சியா முன்னேறினர்.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ‘ஆஸ்திரேலிய ஓபன்’ டென்னிஸ் தொடர் நடக்கிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் உலகின் ‘நம்பர்–5’ இடத்திலுள்ள செர்பியாவின் ஜோகோவிச், ஸ்பெயினின் ராபர்ட்டோ மோதினர். முதல் செட்டை 6–3 என வென்ற ஜோகோவிச், அடுத்த இரு செட்டை 6–4, 6–0 என கைப்பற்றினார். முடிவில் ஜோகோவிச் 6–3, 6–4, 6–0 என்ற நேர் செட்டில் எளிதாக வெற்றி பெற்றார்.
மற்றொரு போட்டியில் ரஷ்யாவின் ரூபலெவ், ஆஸ்திரியாவின் டொமினிக் தியம் மோதினர். இதில் ரூபலெவ் 6–3, 6–4, 6–2 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார். மற்ற போட்டிகளில் பல்கேரியாவின் டிமிட்ரோவ், பிரிட்டனின் ஆன்டி முர்ரே உள்ளிட்டோர் வெற்றி பெற்று, இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினர்.
சபலென்கா அபாரம்
பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் உலகின் ‘நம்பர்–5’ வீராங்கனை பெலாரசின் சபலென்கா, செக் குடியரசின் மார்டின்கோவாவை (74வது இடம்) சந்தித்தார். ஒரு மணி நேரம், 10 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் சபலென்கா 6–1, 6–4 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்தார்.
கார்சியா வெற்றி
மற்றொரு முதல் சுற்றில் உலகத்தரவரிசையில் 4வது இடத்திலுள்ள பிரான்சின் கரோலின் கார்சியா, கனடாவின் செபோவை 6–3, 6–0 என எளிதாக வெற்றி பெற்றார். ஸ்பெயினின் முகுருஜா, பெல்ஜியத்தின் மெர்டென்சிடம் 6–3, 6–7, 1–7 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார்.
மற்ற முதல் சுற்று போட்டிகளில் அலெக்சாண்ட்ரோவா (ரஷ்யா), லேலா (கனடா), கரோலினா பிலிஸ்கோவா (செக் குடியரசு), பெட்ரா மார்டிச் (குரோஷியா), ஜபேயுர் (துனிஷியா), பெலிண்டா பென்சிக் (சுவிட்சர்லாந்து) வெற்றி பெற்றனர்.
காணாமல் போன
நடால் ‘ராக்கெட்
ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ‘நடப்பு சாம்பியன்’ ஸ்பெயினின் நடால், பிரிட்டனின் டிராபர் மோதினர். இதில் நடால் 4–3 என முன்னிலையில் இருந்தார். அப்போது தனது ‘லக்கேஜில்’ வைத்திருந்த டென்னிஸ் ‘ராக்கெட்’ காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து நடுவரிடம் புகார் தெரிவித்தார்.
சில நிமிட தாமதத்துக்குப் பின் மற்றொரு ‘ராக்கெட்டை’ எடுத்து விளையாடி வெற்றி பெற்றார். பந்துகளை எடுத்துதர உதவும் ‘பால் பாய்’ ஒருவர், நடால் ‘ராக்கெட்டை’ எடுத்துச் சென்றது போட்டி முடிந்த பின் தெரிய வந்தது. ‘ரிப்பேர்’ செய்ய எடுத்துச் சென்றதாக கூறிய சிறுவன், நடாலிடம் மீண்டும் ஒப்படைத்தான்.